’கடத்தப்பட்ட பழங்கால சிலைகளை திருப்பி அனுப்பியதற்காக இந்தியர்கள் சார்பாக நன்றி’ – ஆஸி. பிரதமரிடம் மோடி நெகிழ்ச்சி

புதுடெல்லி: இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கடத்தப்பட்ட நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த சிலைகள் மற்றும் ஒவியங்களை திருப்பி அனுப்பி வைத்ததற்காக, ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிசனுக்கு இந்திய பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

இந்தியா – ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான வருடாந்திர உச்சி மாநாடு காணொளி வாயிலாக நடந்தது. இதில் இருநாட்டு பிரதமர்களும் உரையாடினர். இந்த மாநாட்டில் “நமஸ்காரம்” என்று தனது பேச்சைத் தொடங்கிய பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், “ஆஸ்திரேலியாவின் குயின்லாந்து நியூ சவுத் வேல்ஸ் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் சேதங்களுக்காக தனது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியா – ஆஸ்திரேலியா உச்சி மாநாட்டின் வழிமுறைகளை நிறுவதன் மூலமாக இரு நாட்டின் உறவுகளும் பலப்படும்.

எங்கள் நாட்டிலிருந்து சட்டவிரோதமாக கடத்தி செல்லப்பட்ட நூற்றாண்டுகள் பழமையான 29 சிலைகள் மற்றும் படங்களை மீட்டு, அவற்றை இந்தியாவிற்கு திருப்பி அனுப்ப எடுத்த முயற்சிக்கு நன்றி. நீங்கள் திருப்பி அனுப்பிய பழமையான சிலைகள் மற்றும் படங்கள் ராஜஸ்தான், மேற்கு வங்காளம்,குஜராத், ஹிமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து சட்டவிரோதமாக திருடி எடுத்துச் செல்லப்பட்டவை. பல நூற்றாண்டுகள் பழமையானவை. இந்தியர்கள் சார்பில் நான் உங்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நமது முந்தைய மாநாட்டில் இரு நாடுகளுக்கு இடையில் ஒரு விரிவான கூட்டாண்மைகான வடிவத்தை வழங்கியுள்ளோம். இன்று இருநாடுகளுக்கு இடையிலான உச்சி மாநாட்டின் செயல்முறைகளை நிறுவுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இது நமது உறவுகளை மறுபரிசீலனைச் செய்வதற்கான ஒரு கட்டமைப்பை உருவாக்கும். நமது உறவு குறிப்பிடத்தக்க வளர்ச்சி கண்டுள்ளது. வர்த்தகம் மற்றும் முதலீடு, பாதுகாப்பு, கல்வி மற்றும் புத்தாக்கம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் நாம் நெருக்கமான ஒத்துழைப்பைக் கொண்டுள்ளோம்” என்று தெரிவித்தார்.

ரஷ்யா – உக்ரைன் போரின் பின்னணியில் பிராந்திய ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தொடர்ந்து, “அதிகரித்து வரும் மாற்றங்கள் மற்றும் அழுத்தங்களை எங்கள் பகுதி தொடர்ந்து சந்தித்து வருகிறது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் சட்டவிரோத ஆக்கிரமிப்பை குறித்து விவாதிக்க குவாட் தலைவர்கள் சமீபத்தில் அழைத்திருந்தது எங்களுக்கான வாய்ப்பாக கருதுகிறேன். இந்தோ பசிபிக் பிராந்தியத்தில், எங்கள் சொந்த பகுதிக்கான அந்த பயங்கர நிகழ்வின் தாக்கங்கள் விளைவுகள், அதனால் இங்கு நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்க வாய்ப்பளித்தது” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.