“ `காஷ்மீர் ஃபைல்ஸ்' படம் மீது கவர்னருக்கு என்ன அக்கறை?" – தமிழிசையைத் தாக்கும் நாராயணசாமி

காஷ்மீரை மையப்படுத்தி எடுக்கப்பட்ட `தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்திற்கு நாடு முழுவதும் ஆதரவும், எதிர்ப்பும் ஒருசேர எழுந்திருக்கிறது. இந்த நிலையில், அந்த திரைப்படத்தை புதுச்சேரி கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் திரையரங்கில் பார்த்தது விவாதப் பொருளாகியிருக்கிறது. இது தொடர்பாக புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி வெளியிட்ட வீடியோ பதிவில், “சமீபத்தில் நடந்து முடிந்த உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலத் தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் கொடுத்துள்ளது.

பிரதமர் மோடி

குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தில் உட்கட்சி பூசல் காரணமாக காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது. ஆனால் பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியே சென்ற முன்னாள் முதல்வருடன் பா.ஜ.க கூட்டணி வைத்தும், பிரதமர் மோடி, பா.ஜ.க தலைவர்கள் பிரசாரம் செய்தும் அவர்களால் ஒரு இடம் கூட பெறமுடியவில்லை. உண்மையிலேயே பிரதமர் நாடு முழுவதும் செல்வாக்கு மிகுந்த தலைவர் என்றால் பஞ்சாப்பில் பா.ஜ.க ஏன் படுதோல்வி அடைந்தது? காங்கிரஸ் கட்சியினர் இந்த தோல்வியை கண்டு துவண்டுவிடக்கூடாது.

காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி தோல்வி என்பது சகஜம். இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான தலைவர்கள், தொண்டர்கள் காங்கிரஸ் கட்சியை தூக்கிப்பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். தலைவர்களாக சோனியா, ராகுல்காந்தி இருக்கின்றனர். இவர்கள் தலைமையில் ஒருமித்த கருத்துகளை கொண்ட மதசார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைத்து 2024 நாடாளுமன்ற தேர்தலை சந்தித்தால் பா.ஜ.க-வை எளிதாக வீழ்த்திவிடலாம். அதற்கான வியூகத்தை இப்போதே ஆரம்பிக்க வேண்டும். புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க கூட்டணி ஆட்சி அமைத்து ஓராண்டு நிறைவு செய்யும் நேரத்தில் உள்ளனர். ஆனால், மத்திய அரசிடம் இருந்து நாங்கள் வாங்கியதைவிட ஒரு பைசா கூட முதல்வர் ரங்கசாமி கூடுதல் நிதியாக பெறவில்லை.

முதல்வர் ரங்கசாமி!

புதுச்சேரி மாநிலம் நிதி பற்றாக்குறையில் தத்தளிக்கிறது. திட்டங்களை அறிவித்து அவற்றை நிறைவேற்ற இந்த அரசு திணறுகிறது. மத்தியில் உள்ள பா.ஜ.க அரசின் அங்கமாக புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க கூட்டணி இருக்கிறது. முதல்வர் ரங்கசாமி மத்திய அரசோடு இணக்கமாகத்தான் இருக்கிறார். ஆனால் ஏன் முழு பட்ஜெட் போடுவதற்கான அனுமதியை மத்திய அரசிடம் இருந்து அவரால் பெற முடியவில்லை? புதுச்சேரி பா.ஜ.க தலைவர்கள் அதற்கு முட்டுக்கட்டை போடுகிறார்களா? அல்லது மத்திய நரேந்திர மோடி அரசு ரங்கசாமி முழு பட்ஜெட்டை போடக்கூடாது என தடுத்து நிறுத்துகிறதா?

இதற்கு முதல்வர் ரங்கசாமியும், பா.ஜ.க-வினரும் விளக்கம் அளிக்க வேண்டும். நாங்கள் ஆட்சியில் இருந்த சமயத்தில் எந்த அளவுக்கு கிரண்பேடி தொல்லை கொடுத்தாரோ, மத்திய உள்துறை அமைச்சகம் நாங்கள் திட்டங்களை நிறைவேற்றும்போது முட்டுக்கட்டை போட்டதோ, அந்த நிலை இப்போது இல்லை. இந்த சூழ்நிலையில் நீங்கள் ஏன் முழு பட்ஜெட்டை போட முடியவில்லை. அப்படியென்றால் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க கூட்டணியில் விரிசல் ஏற்பட்டிருக்கிறதா என்பதை ரங்கசாமி அறிவிக்க வேண்டும்.

தமிழிசை சௌந்தரராஜன்

முதல்வர் ரங்கசாமி அலுவலகம் தொடங்கி அனைத்து அமைச்சர்களின் அலுவலகத்திலும் தரகர்கள் அமர்ந்து கொண்டு பேரம் பேசுகின்றனர் என்று நான் ஏற்கெனவே கூறியிருந்தேன். காவல்துறை பணியாளர் தேர்வில் அது தற்போது நிரூபணமாகியிருக்கிறது. ஒரு காவலர் பணிக்கு 7 லட்சம் ரூபாய் வரை கேட்கப்படுகிறது.

இந்த நிலை தொடர்ந்தால் புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க கூட்டணி அரசு ஊழல் நிறைந்த அரசு என மக்கள் தீர்மானித்துவிடுவார்கள். எனவே ரங்கசாமி ஊழலற்ற ஆட்சி நடத்தினால், நேரடியாக தலையிட்டு தகுதியின் அடிப்படையில் வேலை வாய்ப்பை கொடுக்க வேண்டும். இல்லையென்றால் ரங்கசாமியும் ஊழலுக்கு துணைபோனார் என்பதை நாங்கள் பகிரங்கமாக மக்கள் மத்தியில் சொல்ல வேண்டிய சூழல் ஏற்படும். இதனை நான் ஒரு எச்சரிக்கையாக சொல்கிறேன். காஷ்மீர் ஃபைல்ஸ் போன்ற மதக்கலவரத்தை தூண்டுகின்ற படத்தை புதுச்சேரி ஆளுநர், முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் அதிகாரிகள் சென்று பார்த்துள்ளனர்.

இந்த படத்தின் மீது ஆளுநருக்கு என்ன அக்கறை? இதிலிருந்து ஆளுநர் அரசியல் செய்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது. அரசின் நிர்வாகத்தின் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் சென்று பார்க்கும்போது, மதக்கலவரத்தை தூண்டுவதற்கு உதாரணமாகவும், காரணமாகவும் இருக்கிறார்களா என்ற கேள்வி எழும். எனவே இந்த படத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். இதுபோன்ற படங்களுக்கு அனுமதி அளிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்” என்று பேசியிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.