லாகூர்,
24 ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அந்த நாட்டு அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது.
இதில் ராவல்பிண்டி மற்றும் கராச்சியில் நடந்த முதல் இரு டெஸ்ட் போட்டிகள் ‘டிரா’வில் முடிந்தது. இந்த நிலையில் பாகிஸ்தான்-ஆஸ்திரேலியா இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட போட்டி லாகூரில் உள்ள கடாபி ஸ்டேடியத்தில் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. 2009-ம் ஆண்டு இலங்கை வீரர்கள் சென்ற பஸ் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவத்துக்கு பிறகு இங்கு அரங்கேறும் முதல் டெஸ்ட் இதுவாகும்.
இந்த ஆடுகளமும் மெதுவான தன்மை கொண்டதாக சுழலுக்கு ஒத்துழைக்கும் வகையில் இருக்கும் என்று இரு அணிகளின் கேப்டன்களும் கணித்துள்ளனர். இதனால் ஆஸ்திரேலிய அணி மாற்றமின்றி நாதன் லயன், மிட்செல் ஸ்வெப்சன் ஆகிய இரு சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்க உள்ளது.
காலை 10.30 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்டை சோனி சிக்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.