1948 சுதந்திரத்துக்குப் பிறகு முதன்முதலாக இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருப்பதால், அங்கு அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்ந்துள்ளது. இலங்கையில் தற்போது தினமும் 8 மணிநேரம் மின்தடை நிலவுகிறது.
அதே சமயம் ஒரு டீ 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒட்டுமொத்த இலங்கையுமே கடந்த 1 மாதமாக மின், எரிபொருள் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் தலைநகரமான கொழும்பு கூட இதற்கு விதிவிலக்கல்ல. தினமும் அட்டவணை போடப்பட்டு மின்தடை செயல்படுத்தப்படுகிறது. இந்த பொருளாதார நெருக்கடியால் மக்கள் சாலைகளில் இறங்கிப் போராடி வருகின்றனர்.
இந்த நிலையில், இலங்கைக்கான சீனத் தூதுவர் ஜி செனோங்க் இன்று செய்தியாளர்கள் சந்திப்பின் போது, “இலங்கையின் பொருளாதார நெருக்கடி சூழலைச் சமாளிக்க இலங்கைக்கு உதவ ஆலோசித்து வருகிறோம். மேலும், இலங்கை அரசு முன்வைத்துள்ள 2.5 பில்லியன் டாலர் உதவிக்கான கோரிக்கையையும் பரிசீலித்து வருகிறோம்.
அதில் 1 பில்லியன் டாலர் கடனுக்காகவும், 1.5 பில்லியன் டாலர் கடன் வரிக்கானதாக இலங்கை அரசாங்கத்தின் முறையீட்டை பெய்ஜிங் ஆய்வு செய்து வருகிறது. எங்கள் இறுதி இலக்கு இந்த பொருளாதார சிக்கலைத் தீர்ப்பதுதான். எனவே அதற்கு வெவ்வேறு வழிகள் இருக்கலாம்.
மேலும் கொரோனா பெருந்தொற்றின் போது 2020-ம் ஆண்டில் சீனா இலங்கைக்கு 2.8 பில்லியன் டாலர் நிதி உதவி வழங்கியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தெற்கு ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் துறைமுகம், விமான நிலையம் மற்றும் பரந்த வீதி வழியமைப்பு போன்ற திட்டங்கள் சீனக் கடன்களைக் கொண்டு நிர்மாணிக்கப்பட்டவை. மேலும், இலங்கை இந்த ஆண்டு வெளிநாட்டுக் கடன்களுக்காகக் கிட்டத்தட்ட 7 பில்லியன் டாலரைச் செலுத்த வேண்டும்.
இதில், இலங்கை மத்திய வங்கியின் கணக்கின் படி சீனக் கடன் மட்டும் மொத்தமாக சுமார் 3.38 பில்லியன் டாலர் என்று குறிப்பிடுகிறது. அரசுக்குச் சொந்தமான வணிகங்களுக்கான கடன்கள் சேர்க்கப்படவில்லை. இந்த நிலையில், இலங்கைக்கான சீனாவின் கடன்களை மறுசீரமைப்பதற்கான கோரிக்கைக்குச் சீனத் தூதுவர் ஜி செனோங்க் உறுதியான பதில் எதுவும் தரவில்லை.
கடந்த வாரம், இந்தியாவிலிருந்து உணவு, மருந்துகள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருள்களை இறக்குமதி செய்வதற்கு இலங்கைக்கு 1 பில்லியன் டாலர் கடன் வழங்கியது குறிப்பிடத்தக்கது.