தாலிக்கு தங்கம் திட்டத்திற்கு பதிலாக உயர்கல்வி செல்லும் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்கப்படும் என்று தற்போதைய தமிழக பொது பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, இன்று சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவிக்கையில், “மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் பெயரிலே நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருந்த திட்டம்தான் இந்தத் திருமண உதவித் திட்டம்.
இந்த திட்டத்திற்க்காக அதிமுக ஆட்சியில் பெறப்பட்டு, நிலுவையில் உள்ள மனுக்கள் பற்றி இப்போது ஆய்வு செய்தபோது, 24.5 விழுக்காடு பயனாளிகள் மட்டுமே தகுதியான பயனாளிகள் என கண்டறியப்பட்டது. இந்தத் திட்டம் குறித்து பல்வேறு குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
பயனாளிகளுக்கு நிதியுதவி மற்றும் தங்க நாணயம் வழங்குவதில் முறைகேடுகள் செய்தவர்கள் மீது, இதுவரை 43 வழக்குகளை லஞ்ச ஒழிப்புத் துறையினர் பதிவு செய்து, கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உயர்நிலைக் கல்வியில் பெண்கள் சேருவது 46 சதவிகிதம் மட்டுமே இருப்பதால், அதை சரிசெய்து, கல்வியே நிரந்தரச் சொத்து என்ற உயரிய நோக்கில்தான் “தாலிக்கு தங்கம் வழங்கக்கூடிய திட்டம்” “6 முதல் 12 ஆம் வகுப்புவரை உள்ள அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் உதவித் தொகை வழங்கும் திட்டமாக” மாற்றியமைக்கப்பட்டுள்ளது” என்று முதல்வர் ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.