13 படங்களில் நீக்கப்பட்டேன் ; நிறைய அழுதேன் : வித்யாபாலன்
பாலிவுட்டின் முன்னணி நடிகையாக இருப்பர் வித்யாபாலன். முதலில் தமிழ் படத்தில் நடிக்க வந்து இங்கு வாய்ப்பு கிடைக்காமல் புறக்கணிக்கப்பட்டு, பல்வேறு அவமானங்களை சந்தித்து அதன்பிறகு பாலிவுட்டுக்கு சென்று முன்னணி நடிகை ஆனார்.
ஆரம்பகால சினிமாவில் தான் சந்தித்த அவமானங்கள் குறித்து ஏற்கெனவே பேசி இருக்கிறார். ஆனாலும் 2 பாலச்சந்தர் படத்திலிருந்து நீக்கப்பட்டதை தற்போது கூறியிருக்கிறார். தற்போது அவர் நடித்துள்ள சல்ஜா படம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. இதன் புரமோசனுக்காக அளித்த பேட்டியில் வித்யா பாலன் இதுகுறித்து கூறியிருப்பதாவது:
நான் நடிக்க வந்த புதிதில் நடந்த சம்பவங்களை என்னால் மறக்கவே முடியாது. 13 படங்களில் இருந்து நான் நீக்கப்பட்டேன். அதில் ஒரு படத்தில் நடிப்பதில் இருந்து தயாரிப்பாளர் என்னை நீக்கி விட்டு, என்னிடம் நடந்து கொண்ட விதம் மறக்க முடியாதது. அவர்கள் என்னிடம் மோசமாக நடந்து கொண்டனர். நான் மிகவும் அசிங்கமாக இருப்பது போன்று உணர வைத்தனர். அதனால் கண்ணாடியில் என்னை பார்ப்பதற்கான தைரியம் வர எனக்கு 6 மாதங்கள் தேவைப்பட்டது.
2004ம் ஆண்டு காலகட்டத்தில், இயக்குனர் கே. பாலசந்தரின் 2 படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டேன். அப்போது, வேறு பல படங்களில் இருந்து நான் விலக்கப்பட்ட நேரம், ஆனாலும் பாலச்சந்தர் படத்தில் இருந்து நீக்கப்பட மாட்டேன் என்ற நம்பிக்கையுடன் இருந்தேன். பாலச்சந்தரின் படப்பிடிப்புக்காக நியூசிலாந்து நாட்டுக்கு செல்ல இருந்த நிலையில் என்னை நீக்கிவிட்டனர். என்னிடம் அதுபற்றி கூறவில்லை. எனது தாயார் கேள்விப்பட்டு என்னிடம் சொன்னார்.
ஆத்திரத்தில் மரைன் டிரைவில் இருந்து பந்திரா பகுதி வரை அந்த நாளில் நடந்தே சென்றேன். கடும் வெயிலில் மணிக்கணக்கில் நடந்து சென்றேன். நிறைய அழுதேன். அந்த நினைவுகள் இன்றும் என்னை விட்டு நீங்காமல் உள்ளன. என்று கூறியிருக்கிறார்.