மதுரை : மதுரையில் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், அரசு அதிகாரிகள், குடும்ப பெண்களிடம் அலைபேசியில் பெண்கள் போல் பேசி பழகி, ஆபாச வீடியோக்களை அனுப்பி அதை பதிவு செய்து மிரட்டி தொடர்ந்து பணம் பறிப்பது அதிகரித்து வருகிறது.
பாதிக்கப்பட்டவர்கள் பலரும் போலீசில் புகார் கொடுக்க முன்வருவதில்லை. உத்தரபிரதேசம், அசாம், ஜார்க்கண்ட் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இதில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது.சிலர் அலைபேசிக்கு பெண் ஒருவர் வாட்ஸ் ஆப், இன்ஸ்ட்கிராம் வழியாக தொடர்பு கொண்டு நட்பு பாராட்டி இருக்கிறார். நாளடைவில் பேசவும் செய்திருக்கிறார். நட்பு பலமாக ‘வீடியோ காலில்’ பேச ஆரம்பித்திருக்கிறார். அப்போது ஆபாச காட்சியை ஓடவிட, எதிர்முனையில் என்ன செய்வதென்று தெரியாமல் முழிக்கும் அந்த நொடிகளை ‘ஸ்கீரின் ரிக்கார்டு’ செய்து கொள்வார். சிலர் சபலத்தில் தொடர்ந்து ‘அந்த’ வீடியோவை பார்ப்பதையும் பதிவு செய்து கொள்வார்.அதை வெளியிட போவதாக மிரட்டி ரூ.5 ஆயிரம் முதல் கூகுள் பே மூலம் பணத்தை பெற்றுக்கொள்கிறார்கள். ‘வெளியே தெரிந்தால் அசிங்கம்’ எனக்கருதி கேட்கும் பணத்தை கொடுத்து கவுரவத்தை காத்துக்கொள்கிறார்கள். அதேசமயம் இதுகுறித்து போலீசில் புகார் தெரிவிப்பதில்லை.
மதுரையில் இருமாதங்களில் இதுபோன்ற தகவல்கள் தொடர்ந்து போலீசிற்கு வருகிறதே தவிர புகாராக வருவதில்லை.போலீசார் கூறுகையில், ”கூகுள் பே அலைபேசி எண், வங்கி கணக்கு எண்ணை ஆய்வு செய்தபோது உத்தரபிரதேசம், அசாம், ஜார்க்கண்ட் மாநிலங்களைச் சேர்ந்தவர்களுடையது எனத்தெரிந்தது. ஒருநாள் பயன்படுத்திவிட்டு அழித்துவிடுகிறார்கள். ஆண்களே பெண்கள் போல் பேசி மிரட்டி பணம் பறிப்பது தெரியவந்துள்ளது” என்றனர்.
மதுரை ஜியோ மியோ இன்பர்மேட்டிக்ஸ் நிர்வாக இயக்குனர் தினேஷ்பாண்டியன் கூறியதாவது: மிரட்டல் வந்ததுமே முதலில் செய்ய வேண்டியது நம் அலைபேசி எண்ணையோ, பேஸ்புக் கணக்கையோ ‘டி ஆக்டிவேட்’ செய்துவிட வேண்டும். வாட்ஸ் ஆப் எண்ணில் அழைக்காமல் இருக்க ‘பிளாக்’ செய்ய வேண்டும். பதிவு செய்யப்படாத எண்ணில் இருந்து அழைத்தால் ஒரு வாரத்திற்கு அழைப்பை ஏற்கவேண்டாம்.
மிரட்டல்காரர்களுக்கு பணிந்து பணம் கொடுக்க ஆரம்பித்தால் மாட்டிக்கொண்டோம் என அர்த்தம். லட்சக்கணக்கில் பணத்தை இழந்த பிறகே போலீசில் புகார் கொடுக்கிறார்கள். இதுபோன்று மிரட்டல் வந்ததுமே மற்றவர்களிடம் தகவல் தெரிவிக்கும் பட்சத்தில் அடுத்தவர்களாவது ஏமாறாமல் இருப்பார்கள், என்றார்.
Advertisement