* சுங்கச்சாவடிகளில் கட்டண கொள்ளைமக்களவையில் 2022-23ம் ஆண்டுக்கான சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கேரளாவை சேர்ந்த சிபிஐ (எம்) எம்பி ஏ.எம்.ஆரிப் பேசுகையில், ‘‘சுங்கச்சாவடி என்ற பெயரில் தனியார் நிறுவனங்கள் பல ஆண்டுகளாக மக்களை கொள்ளையடித்து வருகிறது. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், தனியார் நிறுவனங்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, கட்டுமான செலவை மீட்டெடுத்த பிறகு, சுங்கச்சாவடி கட்டணம் 40 சதவீதமாகக் குறைக்கப்படும். ஆனால், ஒவ்வொரு முறையும் கட்டணங்கள் உயர்த்தப்படுகின்றன. நாட்டின் பல்வேறு திட்டங்களின் ஒரு பகுதியாக இதுவரை வசூலிக்கப்பட்ட சுங்கச்சாவடிகள் குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிடுமாறு நான் அரசுக்கு சவால் விடுகிறேன்’’ என்றார்.* பாலியல் புகார் விசாரிக்க குழுமக்களைவையில் ஒன்றிய தொழிலாளர் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் கூறுகையில், ‘‘பணியிடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் தீர்வு) சட்டத்தை அரசாங்கம் இயற்றியுள்ளது. அதன்படி, 10 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களை பணியமர்த்தும் பொதுத்துறை அல்லது தனியார் நிறுவனங்கள், பாலியல் துன்புறுத்தல் புகார்களைப் பெற குழுவை அமைக்க வேண்டும்’’ என்று கூறினார்.* கச்சா எண்ணெய் பற்றாக்குறையா?மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக எழுப்பப்பட்ட கேள்விக்கு அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி பதிலளிக்கையில், ‘ரஷ்யா-உக்ரைன் மோதலுக்கு மத்தியில் கச்சா எண்ணெய் பற்றாக்குறை ஏற்படும் என்ற அச்சம் தேவையில்லை. ஒரு நாளைக்கு மொத்தம் ஐந்து மில்லியன் பீப்பாய்கள் தேவை. அதில் அறுபது சதவீதம் வளைகுடாவில் இருந்து வருகிறது. வெறும் 0.419 மில்லியன் மெட்ரிக் டன்கள் மட்டுமே நாங்கள் ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்துள்ளோம். அதாவது மொத்த இறக்குமதியில் 0.2 சதவீதம் மட்டுமே’ என்று கூறினார்.* 25,188 பணியிடம் நிரப்ப வேண்டும்தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழு வெளியிட்டுள்ள 34வது ‘மானியங்களுக்கான கோரிக்கை’ அறிக்கையில், ‘பிரசார் பாரதியில் தற்போது 25,188 பணியிடங்கள் காலியாக உள்ளது. தூர்தர்ஷனில் 9,869 இடங்களும், அகில இந்திய வானொலியில் 15,319 இடங்களும் காலியாக உள்ளனர். ஆட்கள் பற்றாக்குறையால் அமைப்பும் அதன் செயல்திறனும் பாதிக்கப்படாமல் இருக்க, பிரசார் பாரதியில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்கிறோம்’ என்று கூறப்பட்டுள்ளது. * பிஎப் வட்டி அரசு விளக்கம்மாநிலங்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், ‘‘வருங்கால வைப்பு நிதி வைப்புத்தொகைக்கான வட்டி விகிதத்தை 8.5 சதவீதத்தில் இருந்து 8.1 சதவீதமாக குறைக்க முன்மொழியப்பட்டது, மற்ற சிறுசேமிப்பு திட்டங்களால் வழங்கப்படும் வட்டி விகிதங்களை விட இது சிறந்தது. தற்போதைய காலத்தின் உண்மைத்தன்மையால் இந்த திருத்தம் ஆணையிடப்படுகிறது’ என்று விளக்கம் அளித்தார்.* பள்ளிகளில் 10 சீட் எம்பிக்கள் ஒதுக்கீடு ரத்தா?மக்களவையில் பேசிய காங்கிரஸ் எம்பி. மணீஷ் திவாரி, `ஒன்றிய அரசு பள்ளிகளில் எம்பி.க்களுக்கான 10 இருக்கை ஒதுக்கீட்டு எண்ணிக்கையை உயர்த்த வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்து பேசிய சபாநாயகர் ஓம் பிர்லா, `இது குறித்து, ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி, எம்பிக்களுக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்வதா? என்பது குறித்து முடிவு அறிவிப்பார். அதன் பிறகு, அனைத்து கட்சிகளுடனும் ஆலோசனை நடத்திய பின்னர் முடிவு எடுக்கப்படும்,’ என்றார்.