டில்லி
மத்திய பலகலைக்கழகங்கள் அனைத்திலும் இளநிலை படிப்புக்களில் சேர பொது நுழைவுத் தேர்வு கட்டாயம் என யூஜிசி அறிவித்துள்ளது.
மத்திய அரசின் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்க்ளுக்கு பொது நுழைவுத் தேர்வு மூலம் இளநிலை படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இதை போல் மத்திய பல்கலைக் கழகங்களில் இளநிலை படிப்புக்களில் சேர 12 ஆம் வகுப்பு மதிப்பெண்களில் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில் பல்கலைக்கழக மானிய ஆணையம் (யுஜீசி) வெளியிட்டுள்ள அறிவிப்பில்
“அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் இளநிலை படிப்புகளுக்கான பொது நுழைவுத்தேர்வு மூலமே 2022-23ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் இனி இளநிலை மாணவர் சேர்க்கைக்கு 12-ஆம் வகுப்பு மதிப்பெண் வெயிட்டேஜ் முறையில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது.
அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களில் பொது நுழைவுத்தேர்வு முடிவுகளை கொண்டு இளநிலை படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறும். இந்த மாற்றம் நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் சம வாய்ப்பு வழங்கும் முறையில் செய்யப்பட்டுள்ளது.
இனி மத்திய பல்கலைக்கழகங்களில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு 13 மொழிகளில் நடத்தப்பட உள்ளது. எனவே மத்திய பல்கலைக்கழகங்களில் தனித்தனி நுழைவுத் தேர்வு மூலமாகவோ, 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலோ மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது”
என உத்தரவு இடப்பட்டுள்ளது.