பீஜிங் : சீனாவில், 132 பேருடன் சென்ற உள்நாட்டு பயணியர் விமானம், மலையில் விழுந்து நொறுங்கியது. அதில் பயணித்த பயணியர் அனைவரும் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.சீனாவின், குன்மிங் நகரில் இருந்து குவாங்ஸோ என்ற இடத்துக்கு, ‘சைனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ்’ நிறுவனத்துக்கு சொந்தமான, ‘போயிங் 737’ விமானம், 123 பயணியர் மற்றும் ஒன்பது விமான ஊழியர்களுடன், உள்நாட்டு நேரப்படி நேற்று மதியம் 1:10க்கு புறப்பட்டது.
இந்த விமானம், மதியம் 2:52 மணிக்கு, குவாங்ஸோ சென்றடைய வேண்டும்.சமூக வலைதளங்கள்ஆனால், விமானம் திடீரென மாயமானதாக, குவாங்ஸோ பாயுன் சர்வதேச விமான நிலையம் தகவல் தெரிவித்தது. இந்நிலையில், மாயமான விமானத்தை கண்டறியும் பணி முடுக்கிவிடப்பட்டது. இதற்கிடையே, சீனாவின் குவாங்ஸி மாகாணத்தின், வுஸ்ஹோ நகரில் உள்ள டெங்ஸியான் கன்ட்ரி மலைப்பகுதியில், விமானம் விழுந்து நொறுங்கும் காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவத் துவங்கின.இதையடுத்து, மாயமான விமானம் குவாங்ஸி மாகாணத்தில் உள்ள மலைப் பகுதியில் விழுந்து நொறுங்கியதாக, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தில், காட்டு தீ பரவ துவங்கியது. உடனடியாக, வுஸ்ஹோ நகரில் இருந்து, 23 தீயணைப்பு வாகனங்களில், 117 வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். குவாங்ஸி மாகாணத்தின் பிற பகுதிகளில் இருந்து, மேலும் 538 வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.அதிகாரப்பூர்வ தகவல்இந்நிலையில், விமானத்தில் பயணம் செய்த 132 பேரின் நிலை என்ன என்பது குறித்து, அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. பயணியர் அனைவரும் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
‘விமானத்தில் பயணித்த ஒருவர் கூட உயிர் பிழைத்ததற்கான தடயம் எதுவும் தென்படவில்லை’ என, சம்பவ இடத்துக்கு முதலில் சென்றடைந்த மீட்பு படை வீரர்கள் தெரிவித்தனர். சீனாவின், ‘சைனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ்’ அந்நாட்டின் மூன்று பெரிய விமான சேவை நிறுவனங்களில் ஒன்று என்ற பெருமையை உடையது. சீன விமானங்கள், 10 கோடி மணி நேரம் பாதுகாப்பான விமான சேவையை அளித்துள்ளதாக, கடந்த மாதம் 19ல், அந்நாட்டு விமானப் போக்குவரத்து துறை அறிவித்தது.கடந்த 2010ல், சீனாவின் ஹெய்லாங் ஜியாங் மாகாணத்தில் உள்ள இச்சுன் என்ற இடத்தில் நடந்த விமான விபத்தில், 42 பேர் உயிரிழந்தனர்.
அதன் பிறகு, விமான விபத்து நிகழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.சீன அதிபர் அதிர்ச்சிசீன அதிபர் ஷீ ஜிங்பிங் கூறியதாவது:’சைனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ்’ விமானம் விபத்துக்குள்ளான தகவல் அறிந்து, அதிர்ச்சி அடைந்தேன். விபத்து நடந்த இடத்தில், மீட்பு பணியை முடுக்கிவிட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், விபத்துக்கான காரணத்தை கண்டறிந்து, எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துக்கள் நடக்காமல் இருக்க தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.விமானத்தின் கடைசி நொடிகள்’சைனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ்’ நிறுவனத்தின் பயணியர் விமானம், குவாங்ஸி மாகாணத்தின், வுஸ்ஹோ நகரை அடைந்த பின், விமானத்துடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
டெங்ஸியான் கன்ட்ரி மலைப்பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கும் காட்சிகள், அருகே உள்ள சுரங்க நிறுவனத்தின் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.அதில், விமானம் செங்குத்தாக தரையை நோக்கி அதிவேகமாக பயணித்து, கீழே விழுந்து நொறுங்கி தீப்பற்றும் காட்சிகள் பதிவாகி உள்ளன.
அந்த விமானம், 29 ஆயிரத்து 100 அடியில் இருந்து, 2.15 நிமிடங்களில், 9 ஆயிரத்து 75 அடிக்கு வந்து, அடுத்த 20 நொடிகளில், 3,225 அடியை எட்டியுள்ளது. அதன் பின், விமானத்துடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.இந்த தகவல், விமானத்தை கண்காணித்த, ‘ரேடார்’ வாயிலாக கண்டறியப்பட்டுள்ளது. ‘பொதுவாக, பறந்து கொண்டிருக்கும் விமானம் படிப்படியாக தரையிறங்க, குறைந்தபட்சமாக 30 நிமிடங்கள் எடுத்துக் கொள்வது வழக்கம்’ என, அதிகாரிகள் தெரிவித்தனர்.