டெல்லியில் நடந்த விழாவில் 64 பேருக்கு பத்ம விருதுகள்: முப்படைகளின் முன்னாள் தளபதி பிபின் ராவத்தின் பத்ம விபூஷண் விருதை மகள்கள் பெற்றனர்

புதுடெல்லி: பத்ம விபூஷண் உள்ளிட்ட பத்ம விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று வழங்கினார். ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் முன்னாள் தளபதி பிபின் ராவத்துக்கு அறிவிக்கப்பட்ட பத்ம விபூஷண் விருதை அவரது மகள்கள் பெற்றுக் கொண்டனர்.

கலை, சமூகப் பணி, பொது விவகாரங்கள், அறிவியல், பொறியியல், வர்த்தகம், தொழில், மருத்துவம், இலக்கியம், கல்வி, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு மத்திய அரசு சார்பில் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. 2022-ம் ஆண்டுக்கான பத்ம விருது பட்டியல் கடந்த ஜனவரி 25-ம் தேதி வெளியிடப்பட்டது. 4 பேருக்கு பத்ம விபூஷண், 17 பேருக்கு பத்ம பூஷண், 107 பேருக்கு பத்மஎன மொத்தம் 128 பேருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டன.

இதில் முதல்கட்டமாக 2 பத்ம விபூஷண், 8 பத்ம பூஷண், 54 பத்மவிருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் டெல்லியில் நேற்று வழங்கினார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த விழாவில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர்.

கல்வி, இலக்கிய துறையில் சிறந்து விளங்கிய மறைந்த ராதா ஷியாம் கெம்காவுக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டிருந்தது. அவரது சார்பில் அவரது மகன் கிருஷ்ணா, குடியரசுத் தலைவரிடம் இருந்து விருதினை பெற்றுக் கொண்டார்.

தமிழகத்தின் குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் முன்னாள் தளபதி பிபின் ராவத்துக்கும் பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த விருதை அவரது மகள்கள் கிருத்திகா, தாரிணி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், டாடா குழுமத்தைச் சேர்ந்த ஏர் இந்தியா நிறுவன தலைவர் சந்திரசேகரன் உட்பட 8 பேருக்கு பத்ம பூஷண் விருதுகளை குடியரசுத் தலைவர் வழங்கினார். ஏர்இந்தியா தலைவர் சந்திரசேகரன் தமிழகத்தைச் சேர்ந்தவர்.

தமிழ் இலக்கியவாதி, கவிஞர் என பன்முகத்தன்மை கொண்ட சிற்பி பாலசுப்பிரமணியம், தமிழகத்தை பூர்விகமாகக் கொண்ட இசைக் கலைஞர் பண்டிட் எஸ்.பாலேஷ் பஜாந்த்ரி, தமிழகத்தின் விராலிமலையைச் சேர்ந்த சதிர் நடனக் கலைஞர் முத்து கண்ணம்மாள், தமிழகத்தைச் சேர்ந்த கிளாரினெட் இசைக் கலைஞர் ஏ.கே.சி.நடராஜன் உட்பட 54 பேருக்கு பத்மவிருது வழங்கப்பட்டது.

தமிழகத்தை பூர்விகமாகக் கொண்ட கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சைக்கு பத்ம பூஷண், நடிகை சவுகார் ஜானகிக்கு பத்மவிருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவர்கள் உட்பட மீதமுள்ளவர்களுக்கு வரும் 28-ம் தேதி விருது வழங்கப்படும் என்று குடியரசுத் தலைவர் மாளிகை தெரிவித்துள்ளது.

குடியரசுத் தலைவர், பிரதமரை சிரம் தாழ்ந்து வணங்கிய 126 வயது சுவாமி சிவானந்தா

உத்தர பிரதேசம் வாரணாசியை சேர்ந்த சுவாமி சிவானந்தாவுக்கு 126 வயதாகிறது. யோகா குருவான அவர் இந்த வயதிலும் நாள்தோறும் யோகாசனம் செய்து வருகிறார். அவருக்கு பத்ம விருது அறிவிக்கப்பட்டிருந்தது.

விருதை பெறுவதற்காக, சுவாமி சிவானந்தா யாருடைய உதவியும் இல்லாமல் தானாக நடந்து வந்தார். முன் வரிசையில் அமர்ந்திருந்த பிரதமர் நரேந்திர மோடியை பார்த்ததும், அவருக்கு முன்பாக தரையில் முழங்காலிட்டு விழுந்து வணங்கினார். அப்போது பிரதமரும் சிரம் தாழ்ந்து வணங்கி அவருக்கு மரியாதை செலுத்தினார்.

விருது பெறுவதற்கு முன்பாக குடியரசுத் தலைவர் முன்பும் சிவானந்தா சிரம் தாழ்ந்து வணங்கினார். அவரை குடியரசுத் தலைவர் கைதூக்கிவிட்டார். 126 வயதிலும் நடந்து வந்த சுவாமி சிவானந்தாவின் உடல் வலிமை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

அவர் விருது பெற்றபோது அனைவரும் கரவொலி எழுப்பி ஆர்ப்பரித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.