புதுடெல்லி: ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட சிலைகள் உள்ளிட்ட 29 பழங்கால பொருட்களை ஒன்றிய அரசு மீட்டு டெல்லி கொண்டு வந்துள்ளது. வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட பழங்கால சிலைகளை கண்டுபிடித்து அவற்றை மீட்பதற்கு தொல்லியல் ஆராய்ச்சி துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், தொல்லியல் துறை தனது டிவிட்டர் பக்கத்தில், ‘ஆஸ்திரேலியாவில் இருந்து 29 பழங்கால சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. கடந்த 1976ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை மொத்தம் 13 பழங்கால பொருட்கள் மீட்கப்பட்டன. 2014ம் ஆண்டு முதல் நேற்று வரை மொத்தம் 228 பழங்கால பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன’ என்று குறிப்பிட்டுள்ளது.ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்டுவரப்பட்ட 29 பொருட்களும் சிவன், சக்தி, விஷ்ணு, ஜெயின் பாரம்பரியம், உருவப்படங்கள் மற்றும் அலங்கார பொருட்கள் என ஆறு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த பழங்கால பொருட்களும் மணற்கல், பளிங்கு, வெண்கலம், பித்தளை போன்றவற்றால் செய்யப்பட்டுள்ளன. இவை தமிழ்நாடு, ராஜஸ்தான், குஜராத், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், தெலங்கானா மற்றும் மேற்கு வங்கம் மாநிலங்களை சேர்ந்தவை ஆகும். இந்த பொருட்களை நேற்று பிரதமர் மோடி ஆய்வு செய்தார்.* ரஷ்யா மீது சாடல்இந்தியா-ஆஸ்திரேலியா உச்சி மாநாடு காணொலி மூலம் நேற்று நடந்தது. இந்த உச்சி மாநாட்டில், பிரதமர் மோடி மற்றும் ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மாரிசன் ஆகியோர் வர்த்தகம், கனிம வளம், இடம்பெயர்வு, கல்வி ஆகியவை குறித்து ஆலோசித்தனர். இதில் பேசிய மாரிசன், ‘‘உக்ரைன் நாட்டில் இப்போது ஏற்பட்டுள்ள பேரழிவுக்கு ரஷ்யா தான் பொறுப்பு ஏற்க வேண்டும். உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை ஆஸ்திரேலியா உள்ளிட்ட குவாட் நாடுகள் ஏற்றுக் கொள்கின்றன’’ என்றார்.