இலங்கைக்கு தேவையான எந்தச் சந்தர்ப்பத்திலும் ஆதரவு வழங்க சீன அரசாங்கம் தயார் என இலங்கைக்கான சீனத் தூதுவர் ஷீ ஷெங் ஹேங் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட சீன திட்டங்கள் ஊடாக 11 ஆயிரம் தொழில்வாய்ப்புக்கள் உருவாகியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பு துறைமுக நகரத்துக்கு 1.5 அமெரிக்க மில்லியன் டொலர்கள் முதலீடு கிடைத்திருப்பதாகவும் சீன தூதுவர் குறிப்பிட்டார்.
உத்தேச அம்பாந்தோட்டை தொழிற்சாலை வலயத்தில் வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான ஒப்பந்தத்தை மேற்கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
இலங்கைக்கு ஒன்று தசம் ஐந்து பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்குவதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாகவும் சீனத் தூதுவர் கூறினார். கொழும்பில் நேற்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதுதொடர்பாக சீன தூதுவர் மேலும் தெரிவிக்கையில்.இலங்கைக்கு சீனா மேலும் 2.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ளது.இது கடன் அடிப்படையில் வழங்கப்படவிருப்பதாகவும் கூறினார்.
2020 ஆம் ஆண்டு தொடக்கம் சீனாவினால் இதுவரையில் 2.8 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனாக வழங்கப்பட்டுள்ளது.1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டு நாணய பரிமாற்றல் நடவடிக்கைக்காக வழங்கப்பட்டவையாகும்.இலங்கை தற்பொழுது எதிர்கொண்டுள்ள நிலைமையை பயன்படுத்தி பயனடைவதற்கு சீனா எந்த வகையிலும் தயார் இல்லை என்றும் குறிப்பிட்டார்
இந்தச் சந்தர்ப்பத்தில் நாட்டின் வெளிநாட்டு செலாவணி நெருக்கடி ஏற்பட பிரதான காரணம் கொவிட் தொற்றும் உலக நாடுகளில் நிலவும் யுத்த முரண்பாடும் ஆகும் என அவர் சுட்டிக்காட்டினார். இலங்கையில் முதலீடு செய்யுமாறு தமது நாட்டு முதலீட்டாளர்களுக்கு சீன அரசாங்கம் ஆலோசனை வழங்கியுள்ளது. நாட்டின் வெளிநாட்டுச் செலாவணி நெருக்கடியைத் தீர்ப்பதற்கு சீன முதலீட்டாளர்கள் மேற்கொள்ளும் முதலீட்டு வாய்ப்புக்கள் துணை புரியும். இதற்காக சீன அரசாங்கம் நேரடியாகத் தலையிடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொவிட் வைரஸ் பரவலுக்கு மத்தியில் இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட சீனாவில் கல்வி கற்ற மாணவர்கள் மீண்டும் சீனா செல்லும் போது எதிர்நோக்கும் நெருக்கடி பற்றியும் இதன் போது கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த சீனத் தூதுவர், தமது நேரடி மத்தியஸ்தத்தின் கீழ், இதற்கான நடவடிக்கைகள் உரிய முறையில் மேற்கொள்ளப்படுவதாக கூறினார்.
கொரோனா வைரஸ் பரவலினால் சீனாவில் கல்வி கற்றுக் கொண்டிருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் தாய்நாடு திரும்பினார்கள் என்றும் இலங்கைக்கான சீனத் தூதுவர் ஷீ ஷெங் ஹேங் தெரிவித்துள்ளார்.