பல்வேறு நாடுகளில் நோய்த்தொற்றுப் பரவல் அதிகரித்து வரும் நிலையில், 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டு பல்வேறு கட்டங்களாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது நாட்டில் 12 வயது முதல் 15 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இதுவரை 181 கோடிக்கும் அதிகமான டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சுகாதார மற்றும் முன்களப் பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஜனவரி மாதம் முதல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த மத்திய சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
வெளிநாட்டு பயணங்களின் போது ஏற்படும் சிரமங்களைத் தீர்க்கவும், பல்வேறு நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டும் இந்தப்பணியை மத்திய அரசு முன்னெடுக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
2-வது டோஸ் செலுத்தப்பட்டு, 9 மாதங்கள் முதல் 39 வாரங்கள் கடந்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.