சென்னை: ஜெயலலிதாவை வெளிநாடு அழைத்து சென்று சிகிச்சை அளிக்கும்படி அமைச்சர்களிடம் கூறினேன் என்று ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
அப்போலோ மருத்துவர்கள், செவிலியர்கள், போயஸ் கார்டன் ஊழியர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் என பலரிடம் இதுதொடர்பான விசாரணை நிறைவு பெற்றுள்ளது.
இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் நேற்று காலை 11.40 மணியளவில் ஆணையத்தின் முன்பு ஆஜரானார். அவரிடம் மாலை 4.30 மணி வரை விசாரணை நடத்தப்பட்டது. மொத்தம் 78 கேள்விகள் கேட்கப்பட்டன.
விசாரணை ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:
சிகிச்சை விவரம் தெரியாது
ஜெயலலிதாவுக்கு என்னென்ன சிகிச்சைகள் வழங்கப்பட்டன, எந்தெந்த மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர் என்ற விவரம் எனக்குத் தெரியாது. 2016 செப்.22-ம் தேதி ஜெயலலிதா மருத்துவமனையில் எதற்காக அனுமதிக்கப்பட்டார் என்றவிவரமும் எனக்குத் தெரியாது. சொந்தஊரில் இருந்தபோது நள்ளிரவு நேரத்தில்,எனது உதவியாளர் மூலம் ஜெயலலிதாமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதைத் தெரிந்து கொண்டேன். அடுத்த நாள் பிற்பகலில் அப்போலோ மருத்துவமனைக்குச் சென்றபோது அங்கிருந்த தலைமைச் செயலர் ராமமோகன ராவிடம் விவரங்களைக் கேட்டறிந்தேன்.
‘ஜெயலலிதா உடல்நிலையில் நல்லமுன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஒரு வாரத்தில் பூரண குணமடைந்து வீடு திரும்புவார்’ என்று அப்போலோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் ரெட்டியின் மருமகன் விஜயகுமார் என்னிடம் தெரிவித்தார்.
அப்போதைய சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலர் ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலர் ராமமோகன ராவ் ஆகியோர்தான் எய்ம்ஸ் மருத்துவர்களை வரவழைத்தனர். அண்ணா, எம்ஜிஆர் ஆகியோரைப் போல ஜெயலலிதாவை வெளிநாடு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கலாம் என்று அப்போதைய அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வேலுமணி ஆகியோரிடம் கூறினேன்.
அப்போலோ மருத்துவர்களிடம் பேசிய பின்னர் வெளிநாடு செல்வது பற்றி முடிவெடுக்கலாம் என்று விஜயபாஸ்கர் தெரிவித்தார். அப்போலோ மருத்துவர் விஜயகுமாரிடமும் இதே கருத்தை வலியுறுத்தினேன். ஜெயலலிதாவை வெளிநாடு அழைத்து சென்று சிகிச்சை அளிப்பது தொடர்பாக அப்போதைய தலைமைச் செயலர் ராமமோகன ராவ் என்னிடம் எதுவும் கூறவில்லை.
பொதுமக்களின் எண்ணத்தின் அடிப்படையிலேயே ஜெயலலிதா மரணம்குறித்த விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முந்தைய தினம் மெட்ரோ ரயில் தொடக்கவிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போதுதான் அவரை கடைசியாகப் பார்த்தேன்.
உடல் உபாதைகள் பற்றி தெரியாது
ஜெயலலிதாவுக்கு சர்க்கரை அளவு அதிகமாக இருக்கிறது என்பதைத் தவிர,அவருக்கு இருக்கும் வேறு உடல் உபாதைகள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணைய கோப்பில்துணை முதலமைச்சர் என்ற அடிப்படையில் நானும் கையெழுத்திட்டுள்ளேன்.
ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்க அமெரிக்காவில் இருந்துமருத்துவர்கள் வந்ததும், அவர்கள் மருத்துவம் பார்க்காமல் திரும்பி சென்றதும் எனக்கு தெரியாது. அப்போலோ மருத்துவமனையில் கண்காணிப்பு கேமராக்களை நான் அகற்றச் சொல்லவில்லை. நான் தர்மயுத்தம் தொடங்கியதில் இருந்து, துணை முதல்வராகப் பொறுப்பேற்கும் வரை 7 முறை பேட்டி அளித்தேன். அதில் நான் சரியான தகவல்களை மட்டுமே தெரிவித்தேன்.
இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
இன்று காலை 10.30 மணிக்கு விசாரணை ஆணையம் முன்பு ஓபிஎஸ் மீண்டும் ஆஜராக உள்ளார்.
தொடர்ந்து ஆணையத்தில் நேற்று ஆஜரான சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசி, விசாரணையின்போது கூறியதாவது:
அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா இருந்த 75 நாட்களும் சசிகலாதான் அவரை உடனிருந்து கவனித்துக் கொண்டார். நான் அனைத்து நாட்களும்மருத்துவமனைக்குச் சென்றேன். ஆனால் ஜெயலலிதாவை ஓரிரு முறைதான் கண்ணாடி வழியாகப் பார்த்தேன். ஜெயலலிதாவுடன் போயஸ் கார்டனில் தங்கியிருந்தபோதுகூட அவரது தனிப்பட்டவிஷயங்கள் குறித்து என்னிடம் பகிர்ந்துகொண்டது இல்லை. 2014-ல் சொத்து குவிப்பு வழக்கில் அவர் சிறைக்கு சென்றபோது, உடல் நலம் குன்றி இருந்தார். மிகுந்த மன உளைச்சலிலும் இருந்தார். 2016-ம் ஆண்டு தேர்தலின்போதும் உடல் நலம் குன்றிதான் இருந்தார்.
இவ்வாறு இளவரசி கூறினார்.