Scene 1
(தக்க ஓவியங்களுடன் பின்னணியில் குரல் ஒலிக்கிறது) இது நம்ம எல்லாருக்கும் தெரிஞ்ச கதை சுமார் 800 வருஷங்களுக்கு முன்னால முயலுக்கும் ஆமைக்கும் ஒரு பந்தயம் நடந்துச்சு அந்த பந்தயம் ஆரம்பிச்சு கொஞ்ச நேரத்துல கிட்டத்தட்ட பாதி தூரத்தைக் கடந்து வந்த முயல் தான் எப்படியும் ஜெயிக்க போறோம்ங்கிற Over confidence ல படுத்து தூங்க ஆரம்பிச்சது. ஆனால் ஆரம்பத்தில் இருந்தே பொறுமையாகவும் நிதானமாகவும் முயற்சி செஞ்சுகிட்டிருந்த ஆமை முயலுக்கும் முன்னாடி போயி பந்தய கோட்டை தாண்டிருச்சு. ஆமா ஆமை ஜெயிச்சிருச்சு. நமக்கு தெரிஞ்ச கதை இங்கேயே முடிஞ்சிடும். ஆனால் நமக்கு தெரியாத ஒரு வரலாறு இங்கதான் ஆரம்பிச்சுது.
தூக்கத்துல இருந்து எந்திரிச்ச முயல் தான் போட்டியில் தோற்றுப்போனதை உணர்ந்து ஆமையை மறுபடியும் பந்தயத்திற்கு கூப்பிட்டதும். அதுக்கு ஆமையும் ஒப்புக்கொண்டது. ஆனால், அடுத்து நடந்த பந்தயம் எல்லாரையும் ஆச்சரியப்பட வைத்தது. முதல் தடவை பந்தயக் கோட்டை தாண்டன அப்போ ஆமைக்கு ஏதோ ஒரு மாயசக்தி கிடைத்திருக்கிறதா எல்லாரும் நம்பினார்கள். பந்தயம் ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்திலேயே முயல் எவ்வளவு வேகமாக ஓடினாலும் ஆமை முயலுக்கும் முன்னாடி அந்த பந்தய கோட்டை தாண்டி நிக்கிறத எல்லாரும் பாத்தாங்க .இது ரொம்ப ஆச்சரியமானதா இருந்தது. அதிலிருந்து ஒவ்வொரு வருஷமும் கிட்டத்தட்ட நூறு வருஷங்களாக அதே நாள்ல பந்தயம் நடத்தப்பட்டது.
ஆனால், அந்தப் பந்தயத்துல ஒரு தடவை கூட முயல் குடும்பத்தை சேர்ந்த யாராலும் ஆமை குடும்பத்து போட்டியாளர்களை ஜெயிக்க முடியல. இதுக்கு காரணம் ஆமை குடும்பத்துக்கு கிடைச்ச அந்த மாயசக்தி தான். போட்டிக்கு முந்தின நாள் இரவு ஆமை குடும்பத்து போட்டியாளர்களுக்கு முந்தின வருஷத்தோட ஆமை வெற்றியாளர் தன்னுடைய சக்தியை கொடுப்பார். இப்படி அந்த மாய சக்தி ஒவ்வொரு வெற்றியாளர்கள் கிட்ட இருந்து அடுத்த போட்டியாளர்கள் கிட்ட கை மாறிக்கொண்டே இருந்தது.
கிட்டத்தட்ட 200 வருஷங்கள் நடந்த இந்த பந்தயம். கடந்த 600 வருடங்களுக்கு முன்னால அப்போ ஆட்சி செய்து கொண்டிருந்த சிங்கராஜாவால,அதிக விபத்துகளுக்கு இந்த பந்தயம் காரணமாக இருக்கு என்று சொல்லி தடை செய்யப்பட்டது. அதுக்கப்புறம் ஒவ்வொரு வருஷமும் முயல் குடும்பத்தைச் சேர்ந்தவங்க எப்படியாவது இந்த பந்தயத்தை நடத்தி அதுல ஜெயிச்சு தங்களுடைய பெயரை நிலைநாட்ட வேண்டும் அப்படின்னு முயற்சி பண்ணிட்டு வராங்க. இந்த வருஷமும் இதற்கான கோரிக்கைகள் சிங்கராஜா கிட்ட கொடுக்கப்பட்டிருக்கு அவர்கிட்ட இருந்து அறிவிப்பு வருமான்னு எல்லாரும் காத்திருக்காங்க ஒருவேளை இந்த பந்தயத்துக்கு அனுமதி கொடுக்கப்பட்டு அது நடக்கும் பட்சத்தில் நம்ம அணிமல் ஸ்டார் டிவில அதை நேரடி ஒளிபரப்பு செய்ய நாங்க ஏற்பாடுகளை செஞ்சுகிட்டு இருக்கோம் . Stay tuned with அனிமல் ஸ்டார் டிவி
Scene 2
(காட்சி 1-ல் மேலே சொன்ன அனைத்தும் ஒரு TV இல் ஒடிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி. அதை முயல் குடும்பத்தினர் பார்த்துக் கொண்டுள்ளனர்)
கண்ணா முயல் (ஏக்கத்துடன்): இந்த வருஷமாவது இந்த போட்டி நடக்குமா
கண்ணா முயலின் அப்பா: கண்டிப்பாக கண்ணா அதற்கான ஏற்பாடுகளை தான் நாங்க செஞ்சுட்டு இருக்கோம் நீ உன் பயிற்சியை மட்டும் நிறுத்தி விடாதே!
கண்ணா முயல் (ஆர்வமாக): நான் எப்பவும் போட்டிக்கு தயாரா இருக்கேன் பாக்கறீங்களா
(மின்னல் வேகத்தில் பள்ளிக்கு தயாராகி ஸ்கூல் பேக்குடன் வந்து நின்றது கண்ணா முயல்)
கண்ணா முயலின் அப்பா: அருமை உன் திறமைக்கான வாய்ப்பு உனக்கு கண்டிப்பா கிடைக்கும் Evening பார்க்கலாம்
(கண்ணா முயல் பள்ளிக்கு கிளம்பியது)
FADE OUT
Scene 3
ராமு ஆமை அதனுடைய அப்பாவுடன் காரில் பயணிக்கும்போது…
ராமு ஆமை (தயக்கத்துடன்): ஸ்கூல்ல எல்லாரும் அந்த போட்டியை பத்திதான் கேக்குறாங்க பா அந்த போட்டிக்கு அனுமதி கிடைச்சா நம்ம குடும்பத்தில் இருந்து நான் தான் கலந்துக்கணும் இல்லையா ? அதை நினைச்சா எனக்கு பயமா இருக்குப்பா
ராமு ஆமையின் அப்பா (தீர்க்கமாக): எனக்கு தெரிஞ்ச வரைக்கும் அந்த போட்டிக்கு அனுமதி கிடைக்காது ஏன்னா அது ஒன்னும் அவ்வளவு முக்கியமான போட்டி கிடையாது. தவிர அந்த போட்டிக்கு அனுமதியே கிடைச்சாலும் அதை பத்தி நீ இவ்ளோ பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஏன்னா End of the day அது வெறும் போட்டிதான்.
ராமு ஆமை (தயக்கத்துடன்): அப்பா நான் ஒன்னு கேட்கட்டுமா உங்களுக்கு அந்த மாய சக்தியை பற்றி தெரியுமா உங்களால எனக்கு அதை கொடுக்க முடியுமா
ராமு ஆமையின் அப்பா (சற்று தயக்கமாக): மாய சக்தி,(கொஞ்சம் யோசிக்கிறார்) இப்ப இது ஒரு முக்கியமான விஷயம் இல்லை. போட்டி வரும் போது அதை பத்தி பாத்துக்கலாம் இப்போ உங்க ஸ்கூல் வந்துருச்சு.
ராமு ஆமை (அவசரமாக): சரிப்பா ஆம் இன்னைக்கு ஈவ்னிங் மான் குட்டியோட பர்த்டே பார்ட்டி இருக்கு நான் அதுக்கு போயிட்டு நேரா வீட்டுக்கு வந்துடறேன் Bye
ராமு ஆமையின் அப்பா: Ok. Bye
Scene 4
மான் குட்டியின் பர்த்டே பார்ட்டியில் நண்பர்களுடன் நடனமாடிக் கொண்டிருந்த ஆமை தெரியாமல் முயலின் காலை மிதித்து விடுகிறது கோபமடைந்த முயல் ஆமையின் சட்டையை பிடித்து …
கண்ணா முயல் (மிரட்டும் தொனியில்): போட்டிக்கு மட்டும் அனுமதி கிடைக்கட்டும் உன்னுடைய மொத்த ஆட்டத்தையும் அடக்கி விடுவேன். அதுவரை ஆடிக் கொள் !
(அதைக் கேட்டு பயந்த ஆமை தன் நண்பர்களிடம்…)
ராமு ஆமை (தயக்கத்துடன்): எனக்கு நேரமாச்சு வீட்டில் என்னைத் தேடுவார்கள். நான் கிளம்புறேன் !
மான்குட்டி: இன்னும் சற்று நேரம் இருந்துவிட்டு போகலாமே
ராமு ஆமை: நான் இப்போது கிளம்பினாலே வீட்டுக்கு போய் சேர ஒன்றரை மணி நேரம் ஆகிவிடும்
குட்டி முதலை: ஒன்றரை மணி நேரமா ? என் வீடும் உன் வீடும் பக்கத்தில்தான் இருக்கிறது ஒன்றரை மணி நேரம் எல்லாம் ஆகாது. வெறும் ஐந்து நிமிடத்தில் போய்விடலாம் நீ வேண்டுமானால் ஜங்கிள் மேப்பில் செக் செய்து கொள்.
ராமு ஆமை: இல்லை என் ஜங்கிள் மேப் தான் ஒன்றரை மணி நேரம் காட்டியது இதோ பார் (தன் போனை நீட்டியது)
குட்டி முதலை: எங்கே கொடு பார்க்கலாம் நீ ஆமை என்பதை ஜங்கிள் மேப்பில் பதிவு செய்யவில்லை போல் தெரிகிறது இப்போது பார் நான் பதிவு செய்த பிறகு இது வெறும் ஐந்து நிமிடம்தான் காட்டுகிறது.
அதே நேரம் ராமு ஆமையின் அப்பாவின் கார் வெளியே வந்து நின்றது.
Scene 5
ராமு ஆமை அதன் அப்பாவின் கார் அருகே சென்றது.
ராமு ஆமையின் அப்பா (அவசரமாக): ராமு காரில் ஏறு ஒரு முக்கியமான வேலை இருக்கிறது
(ராமு ஆமை அமைதியாக காரில் ஏறியது)
ராமு ஆமையின் அப்பா (கார் ஓட்டிக்கொண்டே): போட்டிக்கு அனுமதி கொடுத்து விட்டார்கள் இன்னும் ஒரு வாரம் தான் இருக்கிறது. உன்னை இப்போது நீ தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.
ராமு ஆமை: ஆனா, நீங்க போட்டு இருக்காதுன்னு சொன்னீங்களே!
ராமு ஆமையின் அப்பா (கார் ஓட்டிக்கொண்டே): நானும் அப்படித்தான் நினைச்சேன் ஆனா இந்த முறை எல்லாமே மாறி இருக்கு
ராமு ஆமை: திடீர்னு எப்படி நான் போட்டிக்கு தயாராகும் முடியும்
ராமு ஆமையின் அப்பா (கார் ஓட்டிக்கொண்டே): நான் முன்னமே சொன்ன மாதிரி இது ஒரு போட்டி மட்டும் தான் அதனால அதை பத்தி ரொம்ப கவலை படாதே எனக்கு தெரிஞ்ச ஒரு Running trainer குதிரை கிட்ட நான் உன்னை கூட்டிட்டு போறேன் அங்க ஒரு One Week Training எடுத்தன்ன உன்னால கொஞ்சம் பெட்டரா perform பண்ண முடியும்
ராமு ஆமை(தீர்க்கமாக): என்னால இதுல கலந்துக்க முடியாது நான் எப்படியும் தோற்று விடுவேன் இல்லன்னா நீங்களாவது அந்த மாய சக்தியை எனக்கு கொடுக்க முடியுமா?
ராமு ஆமையின் அப்பா (கார் ஓட்டிக்கொண்டே): கிட்டத்தட்ட 600 வருஷமா நாம குடும்பத்திலிருந்து யாருமே அந்த போட்டியில் கலந்துக்கல அதனால எனக்கு அந்த மாய சக்தியை பற்றி எதுவும் தெரியாது.
நீ ஜெயிக்கணும்னு நான் நினைக்கல. அதேநேரம் போட்டியில் கலந்துக்க கூட தைரியமில்லாத ஒரு கோழையா நீ இருக்கணும்னும் நான் விரும்பல. We are here to give our best shot
(அவர் சொல்லி முடிக்கும் போது வண்டி Running trainer வீட்டு முன் நின்றது. ராமு ஆமை வேண்டாவெறுப்பாக Training எடுக்க ஒத்துக் கொண்டது)
Scene 6
போட்டிக்கு முந்தைய நாள்வரை ராமு ஆமை Training சென்று வந்தது. ஆனால், போட்டிக்கு முந்தைய நாள்…
ஆற்றுக்குள் இருக்கும் முதலை குட்டியின் வீட்டு கதவை யாரோ தட்டினார்கள் முதலைக் குட்டி கதவை திறந்தது வாசலில் வேறு யாருமில்லை ராமு ஆமைதான்.
ராமு ஆமை: அடுத்த ஒரு நாள் நான் இங்கு தான் தங்க போகிறேன் எனக்கு அந்த போட்டியில் கலந்து கொள்ள விருப்பமில்லை அதே நேரம் இதை என் அப்பாவிடம் சொல்ல தைரியமும் இல்லை.
(முதலைக்குட்டி எதுவும் பதில் பேசவில்லை சரி என்று தலையை மட்டும் ஆட்டியது)
சற்று நேரத்தில் மீண்டும் கதவு தட்டும் சத்தம். இம்முறை அப்பா ஆமை வந்திருந்தது.
Scene 7
ராமு ஆமையும் அதன் அப்பாவும் எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தார்கள்.
குட்டி முதலை இரண்டு கப் coffee கொண்டு வந்து மேசை மேல் வைத்து விட்டு சென்றது.
ராமு ஆமையின் அப்பா (கார் ஓட்டிக்கொண்டே): உன்னை நான் கட்டாயப்படுத்தி இருந்தால் என்னை மன்னித்து விடு.
உன்னை கோழை என்று யாரும் சொல்லிவிடக் கூடாது என்றுதான் நான் இவ்வளவும் செய்தேன். வெற்றி பெறுவோம் என்று உறுதியாக தெரிந்தால் தான் போட்டியில் கலந்து கொள்ள வேண்டுமென்றால் நம் குடும்பத்தின் முதல் ஆமையாரே போட்டியில் கலந்து இருக்க மாட்டார்.
அவருக்கு கிடைத்த மாயசக்தி முதல் போட்டியின் முடிவில் கிடைத்தது என்னைப் பொருத்தவரை என் பார்வையில் அந்த முதலாவது ஆமையார் தான் எப்போதுமே Trend setter அதன் பிறகு வந்தவர்கள் எல்லாம் வெறும் Followers தான். கிட்டத்தட்ட 800 ஆண்டுகளுக்குப் பிறகு உனக்கு அப்படி ஒரு Trend setter ஆகும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. முயலின் over confidence ஐ ஆபத்தானது உன்னுடைய தோல்வி பயம். அது மாய சக்தியோ, புகழோ, பொருளோ எதுவாக இருந்தாலும் எல்லா நேரங்களிலும் அதை இன்னொருவர் நமக்கு தர வேண்டிய அவசியமில்லை நாம் அதற்குத் தகுதியானவராக இருந்தால் அதுவே நம்மை தேடி வருவதும் நடக்கும் இங்கு நீ வளர்த்துக்கொள்ள வேண்டிய தகுதி ஓடும் வேகம் அல்ல பங்கேற்கும் தைரியம். Not to win, not to lose, but to give our best shot. (ஓரு சிறிய அமைதி)…
இதற்கு மேல் இதை உன் விருப்பத்திற்கே விட்டு விடுகிறேன்.
ரொம்ப நன்றி முதலை குட்டி என்னை தவிர இன்னொருவர் என் மகன் கோழையாக கூடாது என்று நினைப்பதை பார்த்து சந்தோஷப்படுகிறேன்!
(ஆமை முதலை குட்டியை ஆச்சரியத்துடன் பார்த்தது)
ராமு ஆமை (தீர்க்கமாக): நானும் வருகிறேன் அப்பா இது என்னுடைய போட்டியா இருக்கட்டும்
Scene 8
போட்டி நடக்கும் காலை!
போட்டிக்கான பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றன.
ஆமையும் முயலும் தொடக்கக் கோட்டில் தயாராக இருக்கின்றன பந்தயத்தை துவக்கி வைப்பதற்காக யானை அவர்கள் வந்திருக்கிறார் யானை அவர்கள் கையில் துப்பாக்கியுடன் மேடை மீது ஏறிக் கொண்டிருக்கிறார் அவர் கையிலிருந்த விதிமுறைகளை படிக்க ஆரம்பித்தார் )
யானை(நடுவர்): துப்பாக்கியால் சுட்ட உடன் பந்தயம் துவங்கும் இருவரும் முயலாமை தூண் என்று அழைக்கப்படுகிற பந்தயத்தின் முடிவு கோட்டை நோக்கி ஓடவேண்டும் எந்த பாதையை தேர்ந்தெடுக்கிறீர்கள் எந்த பாதை வழியாக ஓடுகிறீர்கள் என்பது முக்கியமல்ல யார் முதலில் பந்தய கோட்டை அடைகிறீர்கள் என்பதே மிக முக்கியம்.அவரே வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்
யானை அவர்கள் துப்பாக்கியால் வானை நோக்கி சுட்டார். பந்தயம் தொடங்கியது. முயல் மின்னல் வேகத்தில் அந்த இடத்தை விட்டு கிளம்பியது. ஆமை தன்னால் முடிந்த அதிகபட்ச வேகத்தில் அங்கிருந்து நகர்ந்து கொண்டிருந்தது அந்த நொடி ஆமையின் மூளையில் ஒரு யோசனை உதித்தது பாதை எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் என்று ஏனையவர்கள் படித்தது ஞாபகத்திற்கு வந்தது தன்னிடமிருந்த போனை எடுத்து ஜங்கிள் மேப்பில் ஏதேனும் மாற்றுப்பாதை உள்ளதா என்பதை பார்க்க ஆரம்பித்தது ஆச்சரியம் என்னவென்றால் ஏற்கனவே ஜங்கிள் மேப்பில் ஆமையின் Profile பதிவு செய்யப்பட்டு இருந்ததால் இந்த முறை ஆமைக்கான மாற்றுப்பாதை பாதை எங்கள் மேப்பில் காட்டப்பட்டது அது வெறும் இரண்டு நிமிடத்திலேயே அந்த இடத்தை போய்ச்சேர முடியும் என்று காட்டியது அருகிலிருந்த ஒரு நதியில் ஆமை குதித்து உள்ளே நீந்திச் சென்று அந்த நதிக்குள் இருக்கும் ஒரு பொந்தின் வழியே புகுந்து வெளியே வந்தால் முயல்-ஆமைத்தூண் இருக்கும் இடத்திற்கு சென்று விட முடியும் அங்கிருந்து சில நகர்வுகளிலேயே அது பந்தய கோட்டை கடந்துவிட முடியும் என்று காட்டியது ஜங்கிள் மேப் இந்த கடைசி நிமிட ஆச்சரியத்தால் ஆமை உற்சாகம் கொண்டு வேகமாக செயல்பட தொடங்கியது.நதியில் குதித்தது.உள்ளே இருக்கும் பொந்தின் வழியே வெளியே வந்தது. சில நிமிடங்களிலேயே அது பந்தய கொட்டை நெருங்கிவிட்டது. முயலும் தன் வேகத்தால் கிட்டத்தட்ட பந்தய கோட்டை நெருங்கிக்கொண்டிருந்தது. ஆமை துளியும் சளைக்கவில்லை துளியும் ஓய்வெடுக்கவும் இல்லை. அது தன்னுடைய Best Shot ஐ கொடுக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தது வேகமாக நகர்ந்தது பந்தய கோட்டை தொட்டது வெற்றி பெற்றது ஒரு நிமிடம் பின்னே வந்து கோட்டை தொட்ட, முயல் தோல்வியை நினைத்து அழுதது.
Scene 9
ராமு ஆமை கண்ணா முயலிடம் போய் நட்புக்கரம் நீட்டியது.
ராமு ஆமை: கடைசியில் இது ஒரு போட்டிதான். ஒருத்தர் ஜெயிச்சா ஒருத்தர் தோத்துதான் ஆகணும் உன்ன கஷ்டப்படுத்தி இருந்தா என்ன மன்னிச்சிரு. We are here to give our best shot. You gave your best of best.
கண்ணா முயல் ராமு ஆமையிடம் கை குலுக்கியது
கண்ணா முயல்: ரொம்ப thanks ! இப்போவாது உங்ககிட்ட இருக்கிற அந்த மாயசக்தி என்னன்னு சொல்றியா ?
ராமு ஆமை (தீர்க்கமாக): ஆமா எங்ககிட்ட ஒரு மாயசக்தி இருக்கு… அது வேற ஒண்ணும் இல்ல எங்களோட பொறுமை, நிதானம், புத்திசாலித்தனம். நீ நெனச்சா அந்த மாய சக்தியை உன்னாலயும் உருவாக்க முடியும் .
அடுத்த போட்டியில் சந்திப்போம். Again Not to win, not to lose, but to give our best shot.
END CREDIT SCROLL STARTS
OVER CREDIT Scene
தக்க ஓவியங்களுடன் பின்னணிக்குரலில்: ராமு ஆமை சொன்னது சரி தான் ! 800 வருஷங்களுக்கு முன்னால முதன் முதலா கலந்துகிட்ட ஆமையார் எந்த ஜங்கிள் மேப்பும் இல்லாம அந்த மாற்றுப்பாதையை கண்டுபிடிக்க காரணமான அந்த மாயசக்தி…
பொறுமை ! நிதானம்! புத்திசாலித்தனம் தான்!
END CREDIT SCROLL CONTINUES
ஒரு சிறந்த திரைக்கதையால் எந்த ஒரு பழைய கதையையும் சுவாரஸ்யமாக சொல்ல முடியும். இதை நிரூபிக்கும் நோக்கத்தில் காலம் காலமாக சொல்லப்பட்டு வரும் ’முயலும் ஆமையும் கதை’ க்கு என்னால் எழுதப்பட்ட மாதிரி திரைக்கதை வடிவமே இது.