வாஷிங்டன் :
ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர். அதை தொடர்ந்து, முந்தைய அரசின் மந்திரிகள் மற்றும் மூத்த அதிகாரிகள் உயிர் பயத்தில் குடும்பத்தோடு நாட்டை விட்டு வெளியேறினர். அவர்களில் சிலர் தங்களின் வாழ்வாதரத்துக்காக சிறிய, சிறிய வேலைகளை பார்ப்பதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அப்படி ஆப்கானிஸ்தானின் நிதிமந்திரியாக அதிகாரமிக்க பதவியில் இருந்த காலித் பயெண்டா என்பவர் தனது குடும்பத்தை காப்பாற்றுவதற்காக அமெரிக்காவில் கார் டிரைவராக வேலை பார்த்து வரும் தகவல் தற்போது கிடைத்துள்ளது.
நிதிமந்திரியாக இருந்தபோது 6 பில்லியன் டாலர் பட்ஜெட்டை தாக்கல் செய்தவரான காலித் பயெண்டா, தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றுவதற்கு ஒரு வாரத்துக்கு முன்னர், அதிபருடனான கருத்து வேறுபாட்டால் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
பின்னர் தலிபான்கள் ஆட்சி பொறுப்புக்கு வந்ததும் அவர் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. குடும்பத்துடன் அமெரிக்கா தப்பிச் சென்று குடியேறினார். தற்போது, அங்கு அவர் வாடகை கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
அண்மையில் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர், தன்னுடைய பழைய வாழ்க்கை, ஆப்கானிஸ்தானுக்கான கனவுகள் மற்றும் அமெரிக்காவில் உண்மையில் விரும்பாத ஒரு புதிய வாழ்க்கை ஆகியவற்றுக்கு இடையே தான் சிக்கிக்கொண்டிருப்பதாக வேதனையுடன் தெரிவித்தார்.
இதையும் படிக்கலாம்…
ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் இன்று மீண்டும் ஆஜர் ஆகிறார்