சினிமாவையும் சினிமா நட்சத்திரங்களையும் ஆராதித்து கொண்டாடும் மாநிலம் ஆந்திரா. டோலிவுட் படங்கள் என்றாலே மசாலாதான் என்ற பெயரை மாற்றியமைத்து கலைரீதியாகவும் வர்த்தக ரீதியாகவும் தற்போது மாஸ் காட்டி வருகின்றனர். நானியை நாம் செம ஜாலியாக நம் பக்கத்து வீட்டு பையனாக பார்த்திருப்போம். ஆனால், சமீபமாக அவர் தேர்ந்தெடுக்கும் கதைகள் எல்லாம் அவரை ஒரு நடிகனாகத் தூக்கி நிறுத்துகிறது. நானி படத்திற்கு படம் சேஞ்ச் ஓவர் காட்டி வருகிறார்.
‘ஜெர்ஸி’ – கிரிக்கெட் படம், ‘கேங் லீடர்’ – ஃபேமிலி டிராமா, ‘V’ – முதல்முறையாக நெகட்டிவ் ஷேடில் நடித்திருந்தார். ஆனால், சரியாகப் போகவில்லை. மீண்டும் பழைய டெக்னிக்கை கையிலெடுத்தார். ‘டக் ஜெகதீஷ்’ – ஃபேமிலி டிராமாதான். ஓரளவு வரவேற்பு கிடைத்தது ஓடிடி தளத்தில். அடுத்து, ‘ஷியாம் சிங்கா ராய்’. டூயல் ரோலில் கலக்கியிருந்தார். பீரியட் போர்ஷனில் வரும் நானிதான் ஹைலைட்! கதைக்களம், இசை, ஒளிப்பதிவு என படத்திற்கு செம ரெஸ்பான்ஸ்!
அடுத்ததாக, நஸ்ரியாவுடன் ‘அன்டெ சுந்தரனிக்கி’ என்ற காமெடி படமொன்றில் நடித்து முடித்திருக்கிறார். இது அவரின் 28வது படம். ஜூன் மாதம் வெளியாகவிருக்கிறது.
இப்போது நானி ‘தசரா’ படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். தலைமுடி, தாடியெல்லாம் வளர்த்து ரஸ்டிக்கான லுக்கில் இருக்கிறார். கன்னட மாஸ் சினிமாவான கே.ஜி.எஃப் கோலர் தங்கச் சுரங்கம் என்றால் இந்தப் படம் சிங்கரேனி நிலக்கரி சுரங்கத்தின் பின்னணியில் நடக்கும் கதை. இதற்காக ஒரு கிராமத்தை 10 கோடி செலவில் செட் போட்டிருக்கிறார்கள். தெலுங்கானாவில் உள்ள குறிப்பிட்ட ஒரு வட்டார வழக்கை படம் முழுக்கப் பேசியிருக்கிறார் நானி. இந்தப் படம் அவரின் கரியரில் முக்கியமானதாக இருக்கும் என்கிறார்கள்.
கீர்த்தி சுரேஷ்தான் நாயகி. சமுத்திரக்கனி – இப்போது டோலிவுட்டின் மோஸ்ட் வான்டட் ஆர்டிஸ்ட். தெலுங்கில் ஹிட்டாகும் படங்களில் எல்லாம் சமுத்திரக்கனி இருக்கிறார். ஹிட்டாகும் படங்களில் இவர் இருக்கிறாரா இல்லை இவர் இருக்கும் படங்கள் எல்லாம் ஹிட்டாகிறதா என்று தெரியவில்லை. இந்தப் படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
சந்தோஷ் நாராயணன் இசை, சத்யன் சூரியன் ஒளிப்பதிவு என டெக்னிக்கலாக எல்லாருமே நம்ம ஊர் நபர்கள்தான். ஏற்கெனவே, நம் ஊர் ஒளிப்பதிவாளர்களைக் கொண்டாடும் டோலிவுட், இப்போது சத்யன் சூரியனையும் வரவேற்று அரவணைத்திருக்கிறது. கடந்த ஆண்டு சிறந்த எடிட்டிங்கிற்கு (‘ஜெர்ஸி’ படத்திற்காக) தேசிய விருது வென்ற நவீன் நூலிதான் இந்தப் படத்தையும் எடிட் செய்கிறார். அறிமுக இயக்குநர் ஶ்ரீகாந்த் ஒடாலா இயக்குகிறார்.
கமர்ஷியல் எண்டர்டெயினர் வகை தெலுங்குப் படங்களில் சட்டை கசங்காத, காலரில் அழுக்குப் படியாத, கோட் சூட் போட்ட மாஸான ஸ்டைலிஷ் நாயகனாகவே ஹீரோக்கள் பெரும்பாலும் இருப்பார்கள். ஆனால், இப்போது அதன் முகம் மாறியிருக்கிறது. சமீபத்தில், அல்லு அர்ஜுன் ஆனந்த விகடனுக்கு கொடுத்த பேட்டியில், “கமர்ஷியல் சினிமாவைவிட்டு வெளியே போகணும்னு நினைக்கலை. கமர்ஷியல் சினிமாவுக்குள்ளயே பர்ஃபாமென்ஸை எடுத்துட்டு வரணும். அது சாதாரண விஷயம் கிடையாது” என்று குறிப்பிட்டிருந்தார். ‘புஷ்பா’ படத்தில் டயலாக் டெலிவரி, பாடி லேங்குவேஜ் என பர்ஃபாமென்ஸில் கலக்கியிருப்பார். கிட்டத்தட்ட, தற்போது நானியும் அதே ட்ராக்கில்தான் செல்கிறார்.
‘ஜெர்ஸி’ படத்தில் நம்பிக்கை, விரக்தி என இருவேறு எமோஷனில் பக்காவாக ஸ்கோர் செய்திருப்பார். ரயில்வே ஸ்டேஷனுக்குள் வேகவேகமாக நுழைந்து ப்ளாட்பாரத்தில் நின்று கத்தி தன்னுடைய வெற்றியைச் சொல்லும் காட்சி பலருக்கு மோட்டிவேஷன். அதே போல, ‘ஷியாம் சிங்கா ராய்’ படத்தில் செம கம்பீரமாக, முற்போக்குச் சிந்தனையாளராக, புரட்சிகர எழுத்தாளராக வரும் நானியின் உடல்மொழியில் அத்தனை மெனக்கெடல் இருக்கும். அந்த வரிசையில் ‘தசரா’ நிச்சயம் இடம்பெறும் என நம்பலாம்.