“எங்க சார் இந்த பக்கம்…?” – யாராவது நம்மள பாத்து கேட்டா உடனே ‘சும்மா வாக்கிங்’ வந்தேங்கன்னு பதில் சொல்வோம். திருமணமான மகள் பற்றி அக்கம் பக்கத்தார் ‘ஏதாவது விசேஷம் உண்டா’ன்னு கேட்டா அதற்கு அம்மா ‘சும்மாதான் இருக்கா’ ன்னு கவலையோடு சொல்வாள். சும்மா உங்கள பாத்திட்டு போகலாம்னு வந்தேன். தெரிஞ்சவங்க, உறவுக்காரங்க இப்படி ஆரம்பித்தால் 80 சதவீதம் கடன் வாங்கும் முடிவோடுதான் வந்திருப்பாங்கன்னு அடிச்சு சொல்லலாம். வடிவேலுவின் சும்மா காமெடி பார்க்கும் போதெல்லாம் இப்படிக்கூட சிந்திக்க முடியுமான்னு தோணும். ‘சும்மா நிக்காதீங்க.. நான் சொல்லும்படி வைக்காதீங்க’ காதல் பாட்டுலேயும் சும்மாவ கொண்டு வந்தார் வாலி. எல்லாவற்றிற்கும் மேலாக ‘ச்… சு..ம்மா அதிருதுல’ ன்னு சூப்பர் ஸ்டார் ‘சிவாஜி’ படத்துல பஞ்ச் டயலாக் சொல்ல தியேட்டர்கள் அதிர்ந்ததை பார்த்தோம். நம் அன்றாட வாழ்கையில் ஒரு அங்கமாக மாறிப்போன ‘சும்மா’ பற்றி விரிவாக பார்ப்போம்.
கடற்கரை மணலில் அமர்ந்து பார்த்துக்கொண்டு இருந்தால் சும்மா சும்மா கரையை தொட்டு தொட்டு ஓடி விடும் அந்த அலைகள் ஓயாமல் நம் காதுகளில் வந்து ‘விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த..’ உறவான பழைய காதலை பலருக்கு நினைவூட்டும். ‘தாஸ் தாஸ் சின்னப்ப தாஸ்’ – ன்னு ஆட்டம் போடச் சொல்லும். பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் நண்பர்களிடம் ‘வீட்டில் சும்மாதான் இருக்கேன்’ ன்னு விரக்தியாக சொல்வார்கள். காலை முதல் இரவு வரையில் ஏதாவது ஒன்றை செய்து கொண்டு இருந்தாலும் ‘சும்மா’ என்றே வீண் பழி அந்த வார்த்தையின் மீது சுமத்துவார்கள். அது எந்த கோயிலில் சென்று தனக்கான பரிகாரம் செய்து கொள்ளும். யோசிக்க வேண்டிய விஷயம் இது.
ஒரு வித்வான் ஒரு ரூபாய் கொடுத்து வாழைப்பழம் வாங்கி வரச்சொல்ல, சென்ற மனிதன் ஒரு ரூபாய்க்கு இரண்டு கிடைத்ததும் ஒன்றை தின்று விட அவர் இன்னொன்னு எங்கே என்றதும் ‘இன்னொன்னுதாங்க இது’ன்னு சும்மா சும்மா அதையே சொல்ல ‘கரகாட்டக்காரன்’ பட காமெடி இன்றும் அனைவராலும் ரசிக்கும்படி இருக்கிறது. என்றும் இனிமையான என்று சொல்லப்படும் வகையில் பாடல்களைத் தந்தவர் இளையராஜா. பின்னணி இசையில் இன்றளவும் முன்னணியில் இருப்பது அவர் மட்டுமே. இதற்கு மேல் என்ன இருக்கிறது என்று நினைக்கவில்லை… ’NOTHING BUT WIND, HOW TO NAME IT’ தந்தார். திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார் என்பதை தனது இசையால் மெய்ப்பித்துக்காட்டினார். இது போதும் என்று நினைத்திருந்தால் அவர் சும்மா மெட்டுக்கு பாட்டு என்ற நிலையிலேயே இருந்திருப்பார். இன்று ஹங்கேரி இசைக்குழு இசையோடு திருவாசகத்துக்கு மெட்டமைத்து தமிழ் இலக்கியத்தை உலகம் முழுவதும் பரவச்செய்துள்ளார்.
நார் நாராக கிழித்துப் போட்டாலும் வாழை மட்டை சும்மா இருக்கிறதா? இல்லையே, பல ரோஜாக்களை இணைத்து அழகான மாலையாக மாற்றுகிறது. இளம் உள்ளங்களை இணைத்து ‘கல்யாண மாலை’ கொண்டாடும் பெண்ணே’ என்று போற்றிப் பாட வைக்கிறது. எல்லாமே இயங்கிக்கொண்டே இருக்கின்றன. எதுவும் இங்கு சும்மா இருப்பதில்லை.
தருமர் சூதாடாமல் சும்மா இருந்திருந்தால் ‘மகாபாரதம்’ சுருங்கிப் போயிருக்கும். இந்துக்களின் புனித நூலான ‘பகவத்கீதை’ வரவேண்டும், போர் தந்திரங்கள், தர்மம் அதர்மம் பற்றிய தெளிவான சிந்தனைகள் இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து மக்களிடம் சேர வேண்டுமென இறைவன் நினைத்தால் தருமனை இயக்கினார். கர்ணனின் புகழை வெளிக்கொண்டு வந்தார். அதற்காகவே புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்கள் புருஷோத்தமன் புகழ் பாடுகின்றன என்றார் கவியரசர். தானத்தில் சிறந்தது அன்னதானம் என்பார்கள் ஆத்திகர்கள், நிதானம் என்பார்கள் மற்றவர்கள். மிகச் சிறந்தது உடல் தானம்தான் என்று பலரும் சொல்லும் நிலை உருவாகியுள்ளது. உலகநாயகன் கமல் அதில் முன்னோடியாக உள்ளார். அவரும் அவருடைய மகள்களும் உடல் தானம் செய்வதாக பதிவு செய்தார்கள். தங்களுக்கு பிறகு உடல் உறுப்புகள் சும்மா இருந்து மண்ணோடு மண்ணாக போவதை விரும்பாமல் தொடர்ந்து இயங்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கிலே அவ்வாறு . செய்தார்கள்.
கொன்றை வேந்தன் எழுதிய அவ்வையாருக்கு சாகா நிலை தரும் அருநெல்லிக்கனியை கொடுத்தான் அதியமான். வெறும் பாடல்களை மட்டும் தந்து கொண்டு சும்மா இருக்கவில்லை அம்மூதாட்டி. தனது திறமையால் அதியமானுக்கும் அண்டை நாட்டு மன்னன் தொண்டைமானுக்கும் நடக்க இருந்த போரை தடுத்து நிறுத்தினார். பரிசுப் பொருட்களை பெற்றுக் கொள்ளும் அறிஞர்கள் யாரும் சும்மா இருந்ததில்லை என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இந்தியா என்றும் நடுநிலையை போற்றும் நாடு. ஆனாலும், சும்மா இல்லாமல் திடீரென்று 1998 ஆம் ஆண்டு பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தி உலகத்தையே சும்மா அதிரவைத்தது. தனது படைபலம் என்னவென்பதை நிரூபிக்க அந்த சோதனை தேவைப்பட்டது. அதை வைத்துக்கொண்டு யாரையும் மிரட்டவில்லை. தொடர்ந்து நடுநிலைமை கொள்கையே கடைபிடிக்கப்பட்டது. இன்றும் ரஷ்யா உக்ரைன் போர் நடந்த போதும் இரண்டு நாட்டுத்தலைவர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தி போர் நிறுத்தத்தை வலியுறுத்தி வருகிறது இந்திய அரசு.
வேலை இல்லாமல் சும்மா இருக்கிறார்கள் என்று ஒரு பிரிவினர் நிச்சயம் இல்லை. ஏதோ ஒன்றில் அவர்கள் இயங்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் ஒரு மதிப்பீடு இருக்கிறது. அந்த மதிப்பீடு உயர்வதும் தாழ்வதும் நமது செயல்களால் மட்டுமே.
மனம் ஒரு குரங்கு என்பார்கள். அதை தாவவிடாமல் ஒரே இடத்தில் நிலை நிறுத்தி சும்மா இல்லாமல் இயங்க வைக்க வேண்டும். அப்படி இயங்கும் போது எல்லாம் நல்லதாகவே நடக்கும். ‘தினம் கஞ்சி கஞ்சி என்றால் பானை நிறையாது சிந்தித்து முன்னேற வேணுமடி’ன்னு பட்டுக்கோட்டையார் ‘சும்மா கிடந்த நிலத்தை கொத்தி’ என்று நாடோடி மன்னன் படத்தில் எம்.ஜி.ஆருக்காக எழுதிய பாடலை நினைவில் கொள்ள வேண்டும்.
சும்மா வெறும் சும்மா அல்ல. அது ஏதோ ஒரு இயக்கத்தோடு இணைந்த ஒன்று. தனித்து நின்று எதையும் சொல்லாது. அதுவும் ஒரு வரலாறுதான். கேட்டுப் பாருங்கள் ‘உங்களில் ஒருவன்’ என்று அது பதில் சொல்லும்.
திருமாளம் எஸ்.பழனிவேல், திருவாரூர் மாவட்டம்