வாஷிங்டன்:
புதிய வகை உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் கடந்த நவம்பர் மாதம் தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது.
மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்ட ஒமைக்ரான் வைரஸ் குறுகிய காலத்தில் மற்ற நாடுகளுக்கு பரவியது. இதனால் பல நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்தது.
அமெரிக்காவிலும் ஒமைக்ரான் வைரஸ் கடந்த ஜனவரி மாதம் பரவியது. அதன்பின் அங்கு கொரோனா பாதிப்பு வேகமெடுத்தது.
ஒமைக்ரானின் துணை வகைகளான பிஏ.1 மற்றும் பிஏ.2 உருமாறிய வைரஸ்கள் பரவியது. இதில் பிஏ.1 வகை வைரஸ் பெரும்பாலான நாடுகளில் பரவி இருந்தது. அதன்பின் சில நாடுகளில் மட்டும் பிஏ.2 வைரஸ் காணப்பட்டது.
இந்த நிலையில் அமெரிக்காவில் ஒமைக்ரான் வகை கொரோனா தொற்றின் மற்றொரு உருமாறிய வகையான பிஏ.2 வைரசால் பாதிப்பு அதிகரிக்கக் கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து அமெரிக்க அரசின் தலைமை மருத்துவ ஆலோசகர் ஆண்டனி பாசி கூறியதாவது:-
ஒமைக்ரான் வைரசின் புதிய உருமாறிய வகையான பிஏ.2 வைரசால் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கக் கூடும். புதிதாக பாதிக்கப்படுபவர்களில் 30 சதவீதம் பேர் புதிய வகை உருமாறிய ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்படுபவர் என கணிக்கப்பட்டுள்ளது.
இது ஒமைக்ரானைவிட 60 சதவீதம் அதிக பரவும் தன்மை கொண்டது. ஆனாலும் அதிக தீவிரம் இல்லாதது என கருதப்படுகிறது.
தடுப்பூசிகள் மற்றும் பூஸ்டர் தடுப்பூசி இந்த புதிய வகை தொற்று பாதிப்புகளில் இருந்து பாதுகாத்து கொள்ள சிறந்த வழியாகும் என்றார்.
இதற்கிடையே சான்டியாகோவை தளமாக கொண்ட மரபியல் நிறுவனம் ஒன்று பிஏ.2 மாறுபாடு தொடர்பாக ஆய்வு மேற்கொண்டது. இந்த புதிய வகை மாறுபாடு ஆரம்பத்தில் தாமதமாக கண்டுபிடிக்கப்பட்டாலும் நாடு முழுவதும் உள்ள அனைத்து கொரோனா பாதிப்புகளில் 50 முதல் 70 சதவீதம் வரை ஏற்பட்டுள்ளது. பிஏ.2 வைரஸ் பாதிப்பு என்று அந்த நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு தற்போது குறைந்து வந்தாலும் அது நீண்ட காலம் நீடிக்காது என்று சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். அதே வேளையில் ஆரம்பத்தில் பரவிய ஒமைக்ரானைவிட அதன் பிஏ.2 மாறுபாடு கடுமையான பாதிப்பை ஏற்படுத்த கூடியதாக தெரியவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து விஞ்ஞானி வில் லீ கூறும்போது, “வர விருக்கும் வாரங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால் முதல் ஒமைக்ரான் திரிவு காரணமாக ஏற்பட்டது போல ஒரு கடுமையான பாதிப்பை எதிர்பார்க்கவில்லை” என்றார்.
இதையும் படியுங்கள்… தமிழகத்தில் ஜில் ‘பீர்’ தட்டுப்பாடு- டாஸ்மாக் கடைகளில் விற்பனை திடீர் அதிகரிப்பு