வாஷிங்டன்: தலிபான்களுக்கு அஞ்சி அமெரிக்கா தப்பி வந்த ஆப்கன் முன்னாள் நிதியமைச்சர் காலித் பயேண்டா, அன்றாட செலவுகளுக்காக வாஷிங்டனில் உபேர் நிறுவனத்தின் வாடகை கார் ஓட்டும் டிரைவராக பணியாற்றி வருகிறார்.
ஆப்கானிஸ்தானில் முகாமிட்டிருந்த அமெரிக்க படைகள் கடந்த ஆண்டு முழுவதுமாக தாயகம் திரும்பின. இதையடுத்து, அங்குநடந்த உள்நாட்டுப் போரில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினர்.
ஆனால் தலிபான்களை அங்கீகரிக்க பல உலக நாடுகள் மறுத்து வருகின்றன. மேலும் உலக வங்கி, சர்வதேச நிதியம் (ஐஎம்எப்), அமெரிக்க பெடரல் ரிசர்வ் ஆகியவை சர்வதேச நிதியைப் பயன்படுத்த ஆப்கனுக்கு தடை விதித்தன.
இதனால் ஆப்கானிஸ்தானில் வேலையின்மை, வறுமை, பசி பட்டினி அபாயகட்டத்தைத் தாண்டிவிட்டது. மேலும் அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடுமையாக அதிகரித்துள்ளது.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைபற்றும் நேரத்தில் பலர் உயிருக்கு அஞ்சி அங்கிருந்து தப்பியோடினர். அப்போதைய அதிபர் முதல் அமைச்சர்கள் வரை பலரும் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்று விட்டனர். அதிபராக இருந்த அஷ்ரப் கனி குடும்பத்தினருடன் ஐக்கிய அரபு அமீரகத்தில் தஞ்சம் புகுந்தார். பல அமைச்சர்களுக்கு அமெரிக்கா அடைக்கலம் கொடுத்தது.
அதிபர் அஷ்ரப் கானி தலைமையிலான அரசில் நிதியமைச்சராக இருந்தவர் காலித் பயேண்டா பதவி வகித்து வந்தார். குறிப்பாக பல்வேறு நாடுகளும் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பிய நிதியை வைத்து நாட்டை மீண்டும் கட்டி எழுப்பும் நடவடிக்கைக்கு பொறுப்பு வகித்து வந்தார்.
தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் நாட்டை கைப்பற்றியதும் தப்பிச் சென்றவர்களில் காலித் பெயிண்டாவும் ஒருவர். ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பித்து அமெரிக்காவில் அவர் தஞ்சம் புகுந்தார். ஆப்கானிஸ்தானில் இருந்து அவர் தப்பிச் செல்வதற்கு ஒரு வாரத்துக்கு முன்பாகவே அவரது குடும்பத்தினரையும் பத்திரமாக அமெரிக்கா அனுப்பி வைத்தார். பின்னர் அவர் குடும்பத்தினருடன் அமெரிக்காவில் தங்கி விட்டார்.
ஆனால் இப்போது வேலையில்லாததால் வாடகை கார் நிறுவனமான உபேரில் ஒட்டுனராக பணியாற்றி வருகிறார். வாஷிங்டனில் தங்கள் குடும்பத்தினரின் அன்றாட செலவுக்கு பணம் தேவைப்படும் நிலையில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இதுகுறித்து காலித் பயேண்டா கூறியதாவது:
நாங்கள் பார்த்துப் பார்த்து உருவாக்கிய ஆப்கானிஸ்தான் சீட்டுக்கட்டு சரிந்ததைப் போன்று தலிபான்களிடம் வீழ்ந்து விட்டது. என்ன செய்வது என்றே தெரியவில்லை. வேறு வழியில்லாமல் நாங்கள் உயிருக்கு அஞ்சி தப்பி வந்தோம். இங்கு எனது குடும்பத்தினருடன் ஒன்றாக இருக்கிறேன். தினமும் 6 மணி நேரம் வாடகை கார் ஓட்டுகிறேன். இதன் மூலம் 50 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.12 ஆயிரம்) சம்பாதிக்கிறேன். இது எங்கள் குடும்ப செலவுக்கு போதுமானதாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக ‘வாஷிங்டன் போஸ்ட்’டுக்கு அளித்த பேட்டியில் ‘‘எனது குடும்பத்தினருக்கு அடைக்கலம் கொடுக்க முன் வந்ததற்காக அமெரிக்காவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அதேசமயம் ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலைமைக்கு அமெரிக்காவை குற்றம்சாட்டுகிறேன். அமெரிக்க படைகள் திரும்பப் பெறப்பட்டதால் தான் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்ற முடிந்தது.
எங்களுடன் 20 ஆண்டுகள் இருந்தீர்கள். மக்களுக்காக வேலை செய்யும் ஒரு அரசு நிர்வாகத்தை உருவாக்க முழு உலகத்தின் ஆதரவும் இருந்தது. ஆனால் நாங்கள் கட்டியதெல்லாம் அட்டைகளின் வீடு மட்டுமே. இந்த வீடு வேகமாக நொறுங்கி விட்டது’’ எனக் கூறியிருந்தார்.