புதுடெல்லி: உத்தராகண்ட் சட்டப் பேரவைக்கு நடந்த தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் பாஜக 47 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. எனினும், கதிமா தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட முதல்வர் புஷ்கர் சிங் தாமி, காங்கிரஸ் வேட்பாளர் புவன் சந்திர கப்ரியிடம் 6,579 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
எனினும் கட்சி பெற்ற அமோக வெற்றிக்கு புஷ்கர் சிங் தாமியின் பங்களிப்பு முக்கிய காரணம் என்றும் மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த அவர் மீண்டும் முதல்வராக வேண்டும் என்றும் பாஜக தலைவர்கள் விரும்பினர். இந்நிலையில், பாஜக எம்எல்ஏ.க்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கட்சியின் மேலிட பார்வையாளர்களாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ் நாத் சிங், மீனாட்சி லேகி, தேர்தல் பொறுப்பாளர் பிரஹலாத் ஜோஷி கலந்து கொண்டனர்.
இதில் முதல்வர் பதவிக்கு புஷ்கர் சிங் தாமி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரி
வித்தார். புஷ்கர் சிங் தாமி தலைமையில் உத்தராகண்ட் மாநிலம் விரைவான வளர்ச்சி பெறும் என்றும் ராஜ்நாத் சிங் கூறினார். இதையடுத்து, உத்தராகண்ட் முதல்வராக புஷ்கர் சிங் தாமி மீண்டும் நாளை பதவியேற்க உள்ளார்.
– பிடிஐ