நெய்வேலி நிலக்கரி சுரங்கம் என்ற பெயரில் நிலங்களை பறிப்பதா? நாள் குறித்த Dr. அன்புமணி இராமதாஸ்.!

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன சுரங்கங்களின் விரிவாக்கம், புதிய சுரங்கங்கள் என்ற பெயரில் கடலூர் மாவட்ட மக்களின் நிலங்களை பறிக்கும் என்.எல்.சி நிறுவனத்தின் மனிதநேயமற்ற செயல்கள்  தொடர்கின்றன. தொழில்மயம் என்ற பெயரில் பூர்வகுடிமக்களின் நிலங்களை பறித்து, வாழ்வாதாரங்களை அழித்து அவர்களை வீடற்ற நாடோடிகளாக மாற்றும் முயற்சியை பொறுத்துக் கொண்டிருக்க முடியாது என்று, பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “இந்தியாவில் அதிக லாபம் ஈட்டும் நவரத்னா நிறுவனங்களில் ஒன்றாக நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் வளர்ச்சியடைந்திருக்கிறது. என்.எல்.சி நிறுவனத்தின் இந்த வளர்ச்சிக்குக் காரணம் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கான 37,256 ஏக்கர் நிலங்களை வழங்கிய மக்கள் தான். மக்களின் நிலங்களை மூலதனமாக வைத்து என்.எல்.சி நிறுவனம் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நிலையில், அதற்குக் காரணமான மக்கள் என்.எல்.சி நிறுவனத்தின் பங்குதாரர்களாக இருப்பதற்கு பதிலாக, தொழிலாளர்களாகக் கூட பணியில் சேர முடியாமல், தவித்துக் கொண்டிருக்கின்றனர். என்.எல்.சி நிறுவனத்திற்கு நிலங்களைக் கொடுத்தவர்களில் பெரும்பான்மையினர் வாழ்க்கைச் செலவுக்குக் கூட வழியின்றி வாடுகின்றனர்.

என்.எல்.சி நிறுவனத்திற்கு நிலம் கொடுத்து வாழ்வாதாரம் இழந்தோரின் பிரச்சினைகளுக்கே இன்னும்  தீர்வு காணப்படாத நிலையில், அடுத்தக்கட்டமாக 49 கிராமங்களில் இருந்து 25,000-க்கும் கூடுதலான  ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த என்.எல்.சி நிறுவனம் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதல் சுரங்கத்தை விரிவாக்கம் செய்வதற்காக 9 கிராமங்களில் இருந்து 3000-க்கும் அதிகமான ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன; இரண்டாவது சுரங்க விரிவாக்கத்திற்காக 25 கிராமங்களைச் சேர்ந்த மக்களிடமிருந்து 15 ஆண்டுக்கு முன் குறைந்த விலைக்கு வாங்கப்பட்ட 10,000  ஏக்கரும் இப்போது பறிக்கப்படவுள்ளன; இவை தவிர மூன்றாவது சுரங்கத்திற்காக கொளப்பாக்கம், அரசகுழி, சிறுவரப்பூர், உள்ளிட்ட 26 கிராமங்களில் உள்ள 12,125 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்படவுள்ளன. இவற்றின் மொத்தப் பரப்பு இதுவரை கையகப்படுத்தப்பட்ட நிலங்களின் பரப்பில் சுமார் நான்கில் மூன்று பங்காகும்.

என்.எல்.சி நிறுவனத்திற்காக இதுவரை 37,256 ஏக்கர் நிலம் கொடுத்த சுமார் 25,000 குடும்பங்களுக்கு போதிய இழப்பீடு வழங்கப்படவில்லை; அதுமட்டுமின்றி, 25,000 குடும்பங்களில் 1827 பேருக்கு மட்டும் தான் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது. அவர்கள் அனைவரும் பல ஆண்டுகளுக்கு முன்பே ஓய்வு பெற்று விட்ட நிலையில், இப்போது ஒப்பந்தத் தொழிலாளர்களாக மட்டும் 3500 பேர் பணியாற்றுகின்றனர். மண்ணின் மைந்தர்களுக்கு வேலை வழங்க முடியாத ஒரு நிறுவனம், நிலக்கரியை வெட்டி எடுத்தாலும், வைரத்தை வெட்டி எடுத்தாலும் அதனால் உள்ளூர் மக்களுக்கு எந்த பயனுமில்லை. அது மக்களை வாழ்விக்க வந்த திட்டமாக கருதப்படாது; வாழ்வாதாரத்தை பறிக்க வந்த திட்டமாகவே பார்க்கப்படும்.

நிலக்கரி சுரங்கங்களை அமைப்பதற்காக இதுவரை கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு, ஏக்கருக்கு முதலில் சில ஆயிரங்கள், அண்மைக்காலமாக சில லட்சங்கள் என்ற அளவில் தான் இழப்பீடு வழங்கப் பட்டுள்ளது. இப்போதும் கூட மூன்றாவது நிலக்கரி சுரங்கத்திற்காக  கையகப்படுத்தப்படவுள்ள விளை நிலங்களுக்கு மிகக் குறைந்த தொகையை இழப்பீடாக வழங்கப்படும் என்று என்.எல்.சி அறிவித்துள்ளது.

தங்கத்தைப் பறித்துக் கொண்டு, அதற்கு மாற்றாக பித்தளையைத் தருவது போன்ற இத்திட்டங்களை ஏற்றுக் கொள்ள முடியாது; மூன்றாவது சுரங்கத்திற்காக நிலங்களை கையகப்படுத்தக்கூடாது; இரண்டாம் சுரங்க விரிவாக்கத்திற்காக 25 கிராமங்களில் கையகப்படுத்தப்பட்ட 10,000 ஏக்கர் நிலங்களை திரும்ப ஒப்படைத்து விட்டு என்.எல்.சி நிறுவனம் வெளியேற வேண்டும் என்பது தான் கடலூர் மாவட்ட மக்களின் முழக்கமாக உள்ளது. இந்த விஷயத்தில் மக்களுக்கு துணையாக இருக்க வேண்டிய தமிழக அரசு,  மக்களை கைவிட்டு விட்டு என்.எல்.சி நிறுவனத்திற்கு தூதராக நின்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் தொடங்கப்படுவதற்கு முன் கடலூர் மாவட்டத்தில் 8 அடியில் நிலத்தடி நீர் கிடைத்தது. ஆனால், இப்போது நிலத்தடி நீர் மட்டம் ஆயிரம் அடிக்கும் கீழ் சென்றுவிட்டது. நிலத்தடி நீரை உறிஞ்சி கடலுக்கு அனுப்புவது, மழைக் காலங்களில் வெள்ளநீரை வெளியில் தள்ளி பயிர்களை மூழ்கடிப்பது போன்ற செயல்களைத்தான் என்.எல்.சி. நிறுவனம் செய்து கொண்டிருக்கிறது. ஆயிரக்கணக்கான கோடிகளை இலாபமாக ஈட்டினாலும், உள்ளூர் மக்களின் நலனுக்காக என்.எல்.சி. எதுவும் செய்வதில்லை. அந்த நிறுவனத்தால் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்வதற்கான திட்டங்களைக் கூட செயல்படுத்துவதில்லை. இப்படிப்பட்டதொரு நிறுவனம் தேவையா? என்பதே மக்களின் வினாவாகும்.

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் உள்ளூர் மக்களின் நலன்களை பாதுகாக்க ஒருபோதும் விரும்பியதில்லை என்பது அனைவரும் அறிந்தது தான். அந்த நிறுவனத்தால் உள்ளூர் மக்கள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக அவர்களின் பாதுகாவலனாக பாட்டாளி மக்கள் கட்சி செயல்பட்டு வருகிறது. நெய்வேலி முதல் இரு நிலக்கரி சுரங்க விரிவாக்கம்; மூன்றாவது நிலக்கரி  சுரங்கம் ஆகியவை குறித்த மக்களின் கோரிக்கைகள், நிலைப்பாடுகளை மத்திய, மாநில அரசுகளுக்கு கொண்டு சென்று தீர்வு காணவும், அதற்காக கடுமையாக போராடவும் பா.ம.க. தயாராக இருக்கிறது.

என்.எல்.சி நிறுவனத்தால் பாதிக்கப்படும் மக்களைக் காப்பதற்கான இயக்கத்தின் முதல்கட்டமாக பாதிக்கப்பட்ட, பாதிக்கப்படக்கூடிய மக்களை நேரில் சந்தித்து, அவர்களின் கருத்துகளை அறிய முடிவு செய்திருக்கிறேன். அதற்காக கடலூர் மாவட்டம் புவனகிரி தொகுதி, கம்மாபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட சிறுவரப்பூர் கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் 27&ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை காலை 11.00 மணிக்கு இந்தக் கூட்டம்  நடைபெறவிருக்கிறது. அதில் நான் பங்கேற்று மக்களின் கருத்துகளை அறிந்து கொள்ளவிருக்கிறேன்.

இந்தக் கூட்டத்தில் மக்கள் தெரிவிக்கும் கருத்துகளின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை  குறித்து முடிவெடுக்கப்படும். இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு உழவர் பேரியக்கம் உள்ளிட்ட பா.மக.வின் துணை அமைப்புகள் கலந்து கொள்ளும். பொதுமக்களும், வேளாண் பெருங்குடி மக்களும் பெருமளவில் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களின் கருத்துகளை தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.