சீனாவில் 132 பயணிகளுடன் சென்ற விமானத்தில் ஒருவரும் உயிருடன் மீட்கப்படவில்லை என்று தெரியவந்துள்ள நிலையில் விபத்து நடந்த இறுதி நிமிடங்கள் குறித்து தெரியவந்துள்ளது.
‘போயிங் 737’ விமானம் குவாங்ஜி ஜுவாங் பகுதியில் திங்கள்கிழமை கீழே விழுந்து நொறுங்கியது.
விபத்து நிகழ்வதற்கு முன்பு, 29,100 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த அந்த விமானம் 2.15 நிமிஷத்தில் 9,075 அடிக்கு கீழே வந்ததாகவும், அடுத்த 20 விநாடிகளில் 3,225 அடி கீழே இறங்கி ரேடாா் கட்டுப்பாட்டை இழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி விமானமானது செங்குத்தாக வெறும் 3 நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கியுள்ளது.
விபத்து நிகழ்ந்த இடத்திலிருந்து விமானத்தின் உடைந்த பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
எனினும், 18 மணி நேர தேடுதல் பணிகளுக்குப் பிறகும் இதுவரை காயங்களுடன் யாரும் மீட்கப்படவில்லை என்று தெரியவந்துள்ளது.
விபத்துக்குளான சீன ஈஸ்டா்ன் ஏா்லைன்ஸ் விமானத்தில் 123 பயணிகள், 9 விமான ஊழியா்கள் என மொத்தம் 132 போ் இருந்தனா்.
விபத்து நடந்த இடத்தில் 23 தீயணைப்பு வண்டிகளில் 117 வீரா்கள் முதலில் அனுப்பப்பட்டதாகவும், பின்னா் பிற பகுதிகளில் இருந்து 538 தீயணைப்பு வீரா்கள் மீட்புப் பணிகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த விமானம் செங்குத்தாக மலைப் பகுதியை நோக்கி விழும் காட்சியும் விடியோவில் பதிவாகியுள்ளது.
விபத்துக்குள்ளான விமானத்தின் பயணிகளில் யாரும் வெளிநாட்டினா் இல்லை என்று சீனா உறுதி செய்துள்ளது.
இந்த விமான விபத்து அதிா்ச்சி அளிப்பதாக கூறியுள்ள சீன அதிபா் ஷி ஜின்பிங், விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளாா்.