6 மாடி.. ஒரு ஸ்விம்மிங் பூல்.. சூப்பரான ஸ்பா.. காத்திருக்கும் கப்பல்.. புதிரான புடின்!

மிகப் பிரமாண்டமான ஒரு சொகுசுக் கப்பல் இத்தாலியில் தயார் நிலையில் காத்திருக்கிறதாம்.. இதில் என்ன விசேஷம் என்று கேட்கறீங்களா.. இது
ரஷ்ய அதிபர்
விலாடிமிர் புடினுக்குச் சொந்தமான கப்பல் என்று கூறப்படுகிறது.

அந்தக் கப்பலின் பாதுகாப்புக்கு ரஷ்ய உளவுப் பிரிவு அதிகாரிகள் பலர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் புடினின் தனிப்பட்ட பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தகவல்களை புடினின் எதிர்ப்பாளரும், கொலை முயற்சியிலிருந்து உயிர் தப்பியவருமான அலெக்ஸி நவ்லானிக்கு நெருக்கமானவர்கள் வெளியிட்டுள்ளனர்.

இதுதொடர்பாக ரஷ்ய புலனாய்வு செய்தியாளர் மரியா பெவிக் மற்றும் ஊழல் எதிர்ப்பு போராளி ஜார்ஜி அல்புரோவ் ஆகியோர் இணைந்து ஒரு வீடியோவை யூடியூபில் வெளியிட்டுள்ளனர். ஷெராஷேட் என்ற பெயரிடப்பட்ட இந்த பிரமாண்ட சொகுசுக் கப்பல் குறித்து அதில் விவரித்துள்ளனர்.

“புடின் கிட்ட பேசி போரை நிறுத்தச் சொல்லும்மா”.. குவியும் கோரிக்கை.. யார் இந்த அலினா?

இந்த பிரமாண்ட கப்பல் இத்தாலியின் கராரா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. உலகின் மிகப் பெரிய சொகுசுக் கப்பல்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. இதன் உரிமையாளர் யார் என்பது யாருக்கும் தெரியவில்லை. ஆனால் இது புடினுக்குச் சொந்தமானதாக கருதப்படுகிறது. 140 மீட்டர் நீளம் கொண்ட இந்தக் கப்பலின் மதிப்பு கிட்டத்தட்ட 700 மில்லியன் டாலராகும். 6 மாடிகள், 2 ஹெலிபேடுகள், ஒரு நீச்சல் குளம், சூப்பரான ஸ்பா, பியூட்டி சலூன் என சகல வசதிகளும் இதில் உள்ளன.

இந்தக் கப்பலின் கேப்டன் தவிர மற்ற அனைத்து ஊழியர்களுமே ரஷ்யர்கள்தான். அதில் சிலர் ரஷ்ய உளவுப் பிரிவைச் சேர்ந்தவர்கள். இவர்கள் புடினின் தனிப்பட்ட பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த ராணுவம் தொடர்பானவர்களும் கூட.

இந்தக் கப்பல் குறித்த விவரம் இத்தாலி அதிகாரிகளுக்கும் கூட தெரியவில்லை. யார் உரிமையாளர் என்ற விவரத்தையும் இத்தாலி அதிகாரிகளால் அறிய முடியவில்லையாம். இந்தக் கப்பலை இதுவரை இத்தாலி பறிமுதல் செய்யவில்லை. ஆனால் உடனடியாக இந்தக் கப்பலை இத்தாலி பறிமுதல் செய்ய வேண்டும் என்று நவ்லானியின் குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மறுபடியும் கிளம்பிருச்சு.. விமானத் தாக்குதலை அதிகரிக்கும் ரஷ்யா.. பதட்டத்தில் உக்ரைன்!

இந்த விவகாரம் குறித்து இக்கப்பலின் கேப்டன் கய் பென்னட் பியர்ஸ் கூறுகையில், இத்தாலிய அதிகாரிகள் இந்த மாத தொடக்கத்தில் விசாரணைக்காக வந்தனர். எங்களிடம் கப்பலின் உரிமையாளர் குறித்து விசாரணை நடத்தினர். அவர்களிடம் கப்பல் குறித்த விவரங்களை நான் தெரிவித்துள்ளேன். வந்தவர்கள் முரட்டுத்தனமாக நடந்து கொண்டனர். ஒவ்வொரு அம்சத்தையும் தீவிரமாக ஆய்வு செய்தனர். உள்ளூர் போலீஸ் அதிகாரிகள் போல தெரியவில்லை. இந்தக் கப்பல்குறித்த தவறான அம்சங்கள் களையப்பட வேண்டும் என்பதே எனது விருப்பமும் கூட என்றார் அவர்.

இந்தக் கப்பலில் உள்ள ரஷ்யர் அல்லாத ஒரே நபர் பென்னட் பியர்ஸ் மட்டுமே. இவர் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் ஆவார். இவருக்கும் கூட கப்பலின் உரிமையாளர் குறித்துத் தெரியவில்லை. அவர் ரஷ்யராக இருக்கக் கூடும் என்ற அளவில்தான் இவருக்கு விஷயம் தெரிந்திருக்கிறது. “கப்பலின் உரிமையாளரை நான் பார்த்தது இல்லை.. சந்தித்ததும் இல்லை” என்று சொல்லி முடித்துக் கொண்டார் பென்னட் பியர்ஸ்..

கப்பல் ஓனரைக் கண்டுபிடிக்க.. பேசாமல் “ஜேம்ஸ் பாண்ட் 007″ஐ வரவைத்து ஒரு என்கொயரியைப் போடலாம் போலிருக்கு.. !

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.