சென்னை:
சட்டசபையில் நேரம் இல்லா நேரத்தில், ஆன்லைன் சூதாட்டம் குறித்து எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக அ.தி.மு.க. அரசு அவசர சட்டம் பிறப்பித்து தடை செய்ததாகவும், இந்த சட்டத்தால் பாதிக்கப்பட்ட ஆன்லைன் நிறுவனங்கள், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து மூத்த வழக்கறிஞர்களை கொண்டு வாதாடியதாகவும், இதையடுத்து, 03.08.2021 அன்று அ.தி.மு.க. அரசால் இயற்றப்பட்ட சட்டம் ரத்து செய்யப்பட்டதாகவும் கூறினார்.
மேலும், சட்டத்துறை அமைச்சர் சட்ட வல்லுநர்களுடன் ஆராய்ந்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அப்போது தெரிவித்தார் என குறிப்பிட்ட அவர், தற்போது வரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்றும், 100 நாட்களுக்கு மேல் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் திமுக அரசு காலம் தாழ்த்தி வருவதாகவும் குற்றம்சாட்டினார்.
ஆன்லைன் சூதாட்டம் மூலம் சில இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறிய அவர், மூத்த சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து ரம்மி போன்ற ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதற்கு பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்பதில் முதல்வருக்கு மாற்று கருத்து இல்லை என்றும், இந்த சட்டம் அ.தி.மு.க. ஆட்சியில் அவசரமாக கொண்டு வரப்பட்டதாகவும், எதற்காக இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது என்ற குறிப்புகள் முறையாக இல்லாததால்தான் உயர் நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்ததாகவும் கூறினார்.