புதுடெல்லி: உத்தர பிரதேசத்தின் மதரஸாக் களில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. முன்ஷி எனும் எட்டாம் வகுப்பு மற்றும் மவுல்வி எனும் பத்தாம் வகுப்பிற்கான சான்றிதழ்கள்தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இந்த முன்ஷி, மவுல்வி படிப்பு முடித்து சான்றிதழ் பெற்ற வர்களுக்கு, இதர பொதுக் கல்விக் கானப் பள்ளிகளில் உ.பி. அரசின் விதிப்படி, பிளஸ் 2 வகுப்பில் சேர்க்க வேண்டும். ஆனால், இந்த அனுமதியை அரசு பள்ளிகள் மட்டும் அளிக்கின்றனவே தவிர தனியார் பள்ளிகள் அளிப்பதில்லை.
மேலும், கரோனா பரவல் காலத்தில் மூடப்பட்ட மதரஸாக் களால், மாணவர்களில் பலரும் வேலைக்கு சென்றுவிட்டனர். கவுன்சில் கூட்டம் இதுபோன்ற பிரச்சினைகள் தொடர்பாக ஆலோசிக்க உ.பி. மதரஸா கல்வி கவுன்சில் கூட்டம் தலைவர் முனைவர் இப்திகார் ஜாவீத் தலைமையில் நேற்று லக்னோவில் நடைபெற்றது. இதில் பதிவாளர் எஸ்.எஸ்.பாண்டே மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில், மதரஸா கல்வியுடன், சுய வேலை வாய்ப்பு பயிற்சியும் அளிக்கும் யோசனை முன்வைக்கப்பட்டது. இதை ஏற்று அந்த முறையை முன்ஷி, மவுல்வி வகுப்பு மாண வர்களுக்கு அமலாக்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் நாடாளுமன்ற மக்களவையில் வெளியான தகவலின்படி நாடு முழுவதிலும் அரசு அங்கீகாரம் பெற்ற 19,132 மதரஸாக்கள் உள்ளன. இவற்றில், மிக அதிகமாக சுமார் 16,500 மதரஸாக்கள் உ.பி.யில் செயல்படுகின்றன. தவிர உ.பியில் அங்கீகாரம் பெறாத மதரஸாக்களின் எண்ணிக்கை ஐம்பதாயிரத்திற்கும் அதிகம். உ.பி. அரசு அங்கீகாரம் பெற்ற மதரஸாக்களை நவீனமய மாக்க பாஜக அரசு ரூ.479 கோடி ஒதுக்கியது. இதன் பிறகும் மதரஸாக்களில் மாணவர்கள் குறைவது நின்றபாடில்லை.
ஒரு பிகாவின் குத்தகை விலை ரூ.30
உ.பி. மதரஸாக் கல்விக் கவுன்சில் கூட்டத்தில் மிகக்குறைவானத் தொகைக்கு குத்தகைக்கு விடப்பட்ட சில பழமையான அரசு மதரஸாக்களின் நிலங்களை மீட்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. குறிப்பாக, உ.பி. மதரஸா கல்விக் கவுன்சிலின் கீழ் வரும் மதரஸா ஆலியா, 1774-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. ராம்பூரில் அமைந்துள்ள இந்த மதரஸாவில் மூன்று பிகா நிலம், வருடம் ரூ.30 குத்தகைக்கு என சமாஜ்வாதி ஆட்சியில் அதன் மூத்த தலைவர் ஆஸம்கான் பெற்றுள்ளார். இதை அவரிடமிருந்து மீட்டுத்தர முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு கடிதம் எழுதவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.