"என் குழந்தைக்கு ஏற்பட்ட விபத்து கோரமானது" – பெர்சனல் பகிரும் `அறந்தாங்கி' நிஷா!

தன் எதார்த்தமான காமெடி மூலம் பலரையும் தன் ரசிகர்களாக்கியவர், அறந்தாங்கி நிஷா. பட்டிமன்ற பேச்சாளராக, நகைச்சுவை கலைஞராக, தொகுப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கும் நிஷா ஏகப்பட்ட தடைக்கற்களைக் கடந்து இந்த நிலைக்கு முன்னேறியிருக்கிறார். ஓர் விடுமுறை நாளில் நிஷாவைச் சந்தித்துப் பேசினோம்.

அறந்தாங்கி நிஷா

நிறத்தினால் ஏகப்பட்ட அவமானங்களைச் சந்திச்சிருக்கேன். என்னுடைய ஸ்கூல் டைம்ல நான் எந்தப் போட்டிகளிலும் பங்கெடுத்தது கிடையாது. ஆனா, நான் நல்லா பேசுவேன். எதுக்குமே என்னைக் கூப்பிட்டதில்லை. அதே மாதிரி, பிரேயர் சமயத்தில் முதல் ஆளா நின்னு பிரேயர் பாடலை ஒரு நாளும் நான் பாடினதில்லை. நிறத்தினால் நிறைய புறக்கணிப்புகளை சந்திச்சிருக்கேன்.

எங்க வீட்ல எனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்ச சமயம் தொடர்ந்து பலர் என் நிறத்தைக் காரணம் காட்டியே என்னை ரிஜெக்ட் பண்ணியிருக்காங்க. ஒருசிலர், போட்டோவில் பார்த்ததைவிடவும் இவங்க நேர்ல ரொம்ப கறுப்பா இருக்காங்கன்னு ஓப்பனாவே சொல்லிட்டு போயிருக்காங்க. அதில் ஒருத்தங்க இன்னும் ஒருபடி மேலே போய், ‘பொண்ணு கறுப்பா இருக்கு. நீங்க போடுறேன்னு சொன்ன நகையில் 50 பவுன் எக்ஸ்ட்ரா போட்டா எங்களுக்கு ஓகேன்னு சொன்னாங்க. அப்ப எனக்கு நான் என்ன சந்தையில் விற்கிற பொருளான்னு தோணுச்சு. என் அப்பா அப்போ தெளிவா ஒரு முடிவு எடுத்தாங்க. எம் பொண்ணு எம்பிஏ படிக்கட்டும்னு சொல்லி என்னை மேற்கொண்டு படிக்க வச்சாங்க. நான் என்னுடைய நிறத்தை என்னைக்குமே கேவலமா நினைச்சது கிடையாது. என் நிறத்தை நானே கேவலமா நினைச்சேன்னா என் பொறப்பை நானே கேவலப்படுத்திக்கிறதுக்குச் சமம். என் அம்மா எனக்குக் கொடுத்த நிறம். இது எனக்கு எப்பவுமே உசத்தி, என்றவரிடம் அவருக்கு நடந்த விபத்து குறித்துக் கேட்டோம்.

அறந்தாங்கி நிஷா

இதைப் பற்றி நான் எங்கேயும் பேசினதில்லை.. பேசணும்னு நினைச்சதும் இல்லை. `குக்கு வித் கோமாளி’ நிகழ்ச்சியை மாசமா இருக்கும்போதே தொகுத்து வழங்கிட்டு இருந்தேன். பாப்பா பிறந்து 8-வது நாளே நான் அவளைத் தூக்கிட்டு நிகழ்ச்சிகளுக்கு வர ஆரம்பிச்சிட்டேன். எல்லாரும் ரெஸ்ட் எடுக்க வேண்டியது தானே, அப்படி என்ன பணம் வேணும்? அப்படி இப்படின்னு நிறைய பேசுனாங்க. இந்த இடத்துக்கு வர்றதுக்கு நான் பட்ட அவமானமும், கஷ்டமும் அதிகம். அது எனக்கு மட்டும்தான் தெரியும். அதனால் இந்த இடத்தில் என்னை நான் தக்க வச்சிக்கிறதும் ரொம்பவே முக்கியம். அதனால, பாப்பாவையும் தூக்கிட்டு வந்துட்டு போயிட்டு இருந்தேன். மிஸ்டர்&மிஸஸ் சின்னத்திரை ஷூட்டிங்கிற்காக வந்துட்டு இருக்கும்போது செங்கல்பட்டு அருகே திடீர்னு எங்களுக்கு ஆக்ஸிடென்ட் ஆகிடுச்சு. எங்க யாருக்குமே என்ன நடக்குதுன்னு எதுவுமே புரியல. கார் கவிழ்ந்துடுச்சு. குழந்தை சத்தத்தையே காணோம். ஆக்ஸிடென்ட் பார்த்துட்டு ஒரு மூணு பசங்கதான் எங்களுக்கு உதவ வந்தாங்க.

அந்த பையன்கிட்ட என் குழந்தையைக் கொஞ்சம் எங்கன்னு பாருங்கன்னு சொன்னேன். பிறகுதான் குழந்தை அழற சத்தமே கேட்டுச்சு. கார் சீட்டுக்கு அடியில் குழந்தை இருந்தா அவளைத் தூக்கும்போது அடிபட்டுச்சா இல்ல விழும்போதே அடிபட்டுச்சான்னு எங்களுக்கு தெரியல. குழந்தையை வெளியே எடுக்கும்போது அவ உடல் முழுக்க ரத்தம். என்றவரின் குரல் உடைய, மனம் பதைபதைக்க பேச முடியாமல் கண்ணீர் சிந்தினார்.

அறந்தாங்கி நிஷா

தொடர்ந்து பேசியவர், குழந்தைக்கு 60-வது நாள். அவ காது பிஞ்சிடுச்சுன்னு சொல்லி மயக்க மருந்து கொடுக்காம அவ அழ, அழ தையல் போட்டாங்க. அவளுடைய அழு குரலை என்னால கேட்கவே முடியல. எந்த இடத்தில் நான் தப்பு பண்ணேன்னு தெரியல. என் குழந்தையை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன். எனக்கும் காலில் ரத்தம் வந்துட்டு இருந்துச்சு. ஆனா, மனசு முழுக்க சஃபா பற்றி மட்டும்தான் நினைச்சிட்டு இருந்தேன். ஈரோடு மகேஷ் அண்ணன், ரவூஃபா மேம் இவங்க ரெண்டு பேரும் உடனே ஆஸ்பத்திரிக்கு வந்துட்டாங்க. ரவூஃபா மேம் தான் என்னுடைய ஹாஸ்பிட்டல் பில் கட்டினாங்க. அவங்களுக்கும், எங்களை காப்பாற்றி ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு வந்த அந்த பசங்களுக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கேன். இப்பவரை அந்த பசங்களோட நானும் சரி, மகேஷ் அண்ணனும் சரி கான்டெக்ட்லதான் இருக்கோம். அந்த சமயத்தில் அவங்க செய்த உதவி ரொம்பவே பெருசு.

என் குழந்தைக்கு ரெண்டு வயசு வரைக்கும் தாய்ப்பால் கொடுக்கணும்னு நினைச்சேன். ஆனா, அந்த விபத்து நடந்த அதிர்ச்சியில் எனக்கு பால் நின்னுடுச்சு. சஃபாவுக்கு நான் எதுவுமே பண்ணலைங்கிற எண்ணம் எனக்கு எப்பவுமே இருந்துட்டே இருக்கும். அந்த விபத்தை அவ்வளவு எளிமையா என்னால கடக்க முடியல. இன்னைக்கு வரைக்குமே அதை நினைச்சு வருந்தாத நாளே கிடையாது. இந்த விபத்து குறித்து யாருக்கும் தெரியக்கூடாதுங்கிறதுல நான் ரொம்ப உறுதியா இருந்தேன். ஏன்னா, வெளியில் தெரிஞ்சா ஊர் என்ன சொல்லுவாங்க என்கிற பயத்தினாலதான் அது யாருக்கும் தெரியக்கூடாதுன்னு நினைச்சேன். பிக் பாஸில் நான் அதைப் பற்றி சொன்ன பிறகுதான் எங்க சொந்தக்காரங்களுக்கே இந்த விஷயம் தெரிஞ்சது!’ என்றவரின் மன உறுதி சிலிர்க்க வைத்தது!

அறந்தாங்கி நிஷா

மேலும், பல விஷயங்கள் தொடர்பாக நிஷா நம்மிடையே பகிர்ந்து கொண்டார். அவற்றைக் காண லிங்கை கிளிக் செய்யவும்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.