“ரூ.5 கோடி முதலீடு செய்தால், 500 கோடி..”.. 'சதுரங்க வேட்டை' பாணியில் பிரபல நடிகரிடம் மோசடி

இரிடியம் தொழிலில் ரூ. 5 கோடி முதலீடு செய்தால், 500 கோடி கிடைக்கும் என்பதை நம்பி, நடிகர் விக்னேஷ் ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் இழந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

ஹெச் வினோத் இயக்கத்தில், நடராஜன், இசாரா நாயர், மனோபாலா, இளவரசு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து, கடந்த 2014-ம் ஆண்டு வெளியான படம் ‘சதுரங்க வேட்டை’. இந்தப் படத்தில் பிரபலங்கள், தொழிலதிபர்கள், பொதுமக்களை எப்படி எல்லாம் பண ஆசையை தூண்டி ஏமாற்றலாம் என்பதே படத்தின் மையக் கருவாக இருந்தது. அதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இரிடியம் என்ற பெயரை பயன்படுத்தி பணத்தை இருமடங்காக மாற்றி தருவதாக நட்டி என்கிற நடராஜன் நடித்திருப்பார்.

மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எடுக்கப்பட்ட இந்தப் படம், வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதுபோன்ற படங்களை பார்த்தும், படிப்பறிவில்லாத மக்கள் ஏமாறுவது மட்டுமின்றி, சினிமா பிரபலங்களும் ஏமாறுவதுதான் வேதனை தருகிறது. 

image

அந்தவகையில், ‘கிழக்கு சீமையிலே’, ‘ராமன் அப்துல்லா’, ‘பசும்பொன்’ உட்பட பல திரைப்படங்களில் நடித்த விக்னேஷ், தான் ஏமாந்துவிட்டதாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அதன்படி, நடிகர் விக்னேஷ், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மோசடி புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அந்தப் புகாரில், “கிண்டி தொழிற்பேட்டை பகுதியில் தனக்கு சொந்தமான கட்டிடத்தில் உயர்ரக சலூன் கடை ஒன்றை நடத்தி வருகிறேன். அந்த கடைக்கு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் சைரன் வாகனத்தில் வாடிக்கையாளரான ராம் பிரபு என்பவர் அடிக்கடி வருவார்.

அப்போது துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது எதற்கு எனக் கேட்டதற்கு, இந்திய அரசாங்கத்தின் அனுமதியோடு, ஆஸ்திரேலியா நாட்டு நிறுவனத்திற்கு, சுமார் 3 ஆயிரம் கோடி மதிப்பிலான இரிடியத்தை விற்றதால், தனக்கு பாதுகாப்பு வழங்கியதாக ராம் பிரபு தெரிவித்தார். மேலும் ராம் பிரபு, இரிடியம் தொழிலில் 5 கோடி ரூபாய் முதலீடு செய்தால், 500 கோடி ரூபாய் வரை லாபம் கிடைக்கும் என்று, தன்னை முதலீடு செய்ய கூறி நம்ப வைத்தார்.

image

பின்னர் ராம் பிரபு, இரிடியம் குறித்தான கருத்தரங்கு கூட்டத்திற்கு தன்னை அழைத்துச் சென்று, முக்கிய பிரமுகர்களை அறிமுகப்படுத்தி, இரிடியம் சட்டபூர்வமான தொழில் என ராம் பிரபு, தன்னை நம்ப வைத்தார். இவரை நம்பி 1,81,79,000 ரூபாயை, ராம் பிரபுவின் வங்கி கணக்கிற்கு சிறுக சிறுக அனுப்பினேன். இதனையடுத்து பல நாட்களாக கொடுத்த பணத்திற்கு இரட்டிப்பாக பணம் கொடுக்காததால், ராம் பிரபுவிடம் இதுகுறித்து கேட்டேன்.

கன்டெய்னரில் 500 கோடி ரூபாய் வந்து கொண்டிருப்பதாகவும், வட்டியுடன் தந்து விடுவதாக கூறி கையெழுத்திட்டுக் நம்பிக்கை கொடுத்தார் ராம் பிரபு. எனினும், அவர்மீது எழுந்த சந்தேகத்தால், அவரை பற்றி விசாரித்தபோது, ராம் பிரபு மோசடி நபர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து ராம் பிரபுவிடம் இதுகுறித்து கேட்டேன். தன்னிடம் பணம் கொடுக்க முடியாது எனக்கூறி கொலை மிரட்டல் விடுத்தார்.

image

தன்னைப் போல் பல பேர், ராம்பிரபுவிடம் கோடிக்கணக்கில் பணத்தை இழந்து இருப்பது தெரிய வந்தது. உடனடியாக மோசடி நபர் ராம் பிரபு அவரது கூட்டாளிகள் மீது நடவடிக்கை எடுத்து இழந்த பணத்தை காவல்துறையினர் பெற்றுத் தர வேண்டும்” என்று புகாரில் தெரிவித்துள்ளார்.

இந்த புகாரை பெற்று கொண்ட காவல்துறையினர், சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து நடிகர் விக்னேஷ் அளித்த புகார் குறித்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எனினும், இதுவரை வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. இந்த சம்பவம் தமிழ் திரையுலகத்தினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.