கீவ்:
உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் இன்று 27-வது நாளை தொட்டுள்ளது. உக்ரைனின் அனைத்து நகரங்களிலும் ரஷிய படைகள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது.
தலைநகர் கீவ், கார்கீவ், மரியுபோல் உள்ளிட்ட நகரங்கள் மீது ஏவுகணை, வான்வழி தாக்குதல் நடக்கிறது. ரஷிய படைக்கு எதிராக உக்ரைன் ராணுவ வீரர்களும் கடுமையாக போரிட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் உக்ரைனுக்குள் நுழைந்துள்ள ரஷிய படைகளுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். உக்ரைனின் கெர்சன் நகரை ரஷிய ராணுவம் சமீபத்தில் கைப்பற்றியது. அங்கு ரஷிய வீரர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள்.
ரஷிய படைகள் உக்ரைனில் இருந்து வெளியேற வேண்டும் என்று கோஷம் எழுப்பினார்கள் அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது ரஷிய ராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தியதாக உக்ரைன் குற்றம்சாட்டி உள்ளது.
இதுதொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டது. அதில் மக்கள் மீது ரஷிய படை துப்பாக்கி சூடு நடத்துவதும் அவர்கள் சிதறி ஓடுவதும் பதிவாகி உள்ளது.
இதுகுறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறும் போது, ‘எங்களது மக்கள் சுதந்திரத்துக்காக அமைதியாக ஆயுத மின்றி போராட்டம் நடத்தினர். அவர்களை ஆக்கிரமிப்பாளர்கள் துப்பாக்கியால் சுடுகின்றனர்’ என்றார்.
உக்ரைன் வெளியுறவு மந்திரி குலேபா கூறும் போது, ‘கெர்சன் நகரில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக மக்கள் அமைதியாக போராட்டம் நடத்தியபோது ரஷியாவின் போர் குற்றவாளிகள் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர் என்று தெரிவித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.
உக்ரைன் மீது ரஷியா போர் தொடங்கிய முதல் வாரத்தில் முக்கிய நகரான கெர்சனை கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது. துறைமுக நகரான மரியுபோல் மீது ரஷியாவின் தாக்குதல் தீவிரமாகிக் கொண்டே செல்கிறது.
மரியுபோல் நகரம் சரணடைய வேண்டும் என்று ரஷியா காலக்கெடு விதித்ததை உக்ரைன் நிராகரித்து விட்டது. இதனால் அந்நகரம் மீது தாக்குதலை ரஷிய படைகள் அதிகப்படுத்தி உள்ளது. ஏற்கனவே உருக்குலைந்துள்ள மரியுபோல் நகரம் மேலும் பலத்த சேதத்தை சந்தித்துள்ளது.
தலைநகர் கீவ்வில் ரஷிய ராணுவத்தினர் ஏவுகணைகளை வீசி தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். அங்குள்ள வணிக வளாகம் மீது வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டதில் அக்கட்டிடம் முற்றிலும் நாசமானது.
இதற்கிடையே ரஷியாவில் தொடர் தாக்குதல் காரணமாக கீவ் நகரில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கீவ் நகரை பிடிக்க ரஷிய ராணுவம் தீவிர தாக்குதலை நடத்தி வந்தாலும் அந்நகருக்குள் இன்னும் நுழைய முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.