நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேச சட்டமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. மொத்தம் 403 தொகுதிகளை கொண்ட அம்மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் முனைப்பு காட்டி வந்தன. தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக்கணிப்புகள் பாஜகவுக்கு ஆதரவாக இருந்தபோதும், நான்கு முனைப் போட்டி நிலவியபோதும் உண்மையான போட்டி என்னவோ
பாஜக
மற்றும் சமாஜ்வாதி கட்சிக்கு இடையேதான் என அரசியல் நோக்கர்கள் கணித்தனர்.
அகிலேஷ் யாதவுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இருக்கிறது என்றும் கூறப்பட்டது. ஆனால், தேர்தலில் பாஜக வெற்றி அடைந்தது. 255 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாஜக, கூட்டணி கட்சிகளையும் சேர்த்து 273 எம்.எல்.ஏ.க்களுடன் ஆட்சியை மீண்டும் தக்கல் வைத்து கொண்டது.
அதேசமயம், 111 இடங்களில்
சமாஜ்வாதி கட்சி
வெற்றி பெற்றது. கடந்த 2017 தேர்தலை காட்டிலும் அதிக இடங்களில் அந்த கட்சி வெற்றி பெற்றிருந்தது. மேலும், வாக்கு சதவீதமும் அக்கட்சிக்கு அதிகமாக இருந்தது. இதனால், அம்மாநிலத்தில் பலம் மிகுந்த எதிர்க்கட்சியாக சமாஜ்வாதி கட்சி உருவெடுத்துள்ளது. கார்ஹல் தொகுதியில் போட்டியிட்ட அக்கட்சியின் தலைவர்
அகிலேஷ் யாதவ்
, அந்த தொகுதியில் அமோக வெற்றி பெற்றார்.
சுங்கக் கட்டணம் குறைகிறது? – மத்திய அரசு திட்டத்தால் ஜாக்பாட்!
இந்த நிலையில், சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற அகிலேஷ் யாதவ், தான் ஏற்கனவே வகித்து வந்த மக்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர், தனது ராஜினாமா கடிதத்தை மக்களவை சபாநாயகர் ஓம்.பிர்லாவிடம் வழங்கினார். மாநில அரசியலில் முழுவதுமாக ஈடுபடும் வகையில் அவர் மக்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக கூறாப்படுகிறது. அதேபோல், சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த அசாம் கானும் மக்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
கடந்த 2019 ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவை தேர்தலின் போது உத்தரபிரதேசத்தின் கிழக்குப்பகுதியான அஸாம்கார் தொகுதியில் போட்டியிட்ட சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் அதில் வெற்றி பெற்று மக்களவை உறுப்பினர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.