பெங்களூரு: மேகதாதுவில் தடுப்பணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், அந்த அணையைக் கட்டுவதற்கு கர்நாடகா அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை உறுதிபட தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ராமநகரா மாவட்டம், கனகபுரா அருகே 67 டிஎம்சி தண்ணீரை சேமித்து வைக்கும் வகையில் சமநிலை நீர்தேக்கம் கட்டும் மேகதாது திட்டத்தை செயல்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் கர்நாடகா அரசு எடுக்கும். சமீபத்தில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, மத்திய அரசின் சுற்றுச்சூழல் அனுமதியும் பெறப்படும். திட்டத்தைச் செயல்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்.
காவிரி விவகாரத்திற்கு, காவிரி நதிநீர் பிரச்சினை தீர்ப்பாயம் மூலமாக தீர்வு காணப்பட்டு, நீர்ப் பங்கீடு செய்யப்பட்டுள்ளது. நீர் திறந்து விடுவதற்கு காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் உள்ளது. எங்கள் நதிப் படுக்கைகளில் பெய்யும் மழைநீரின் அளவினைக் கொண்டு, எங்களின் குடிநீர்த் தேவைக்காக மேகதாது திட்டத்தை வகுத்துள்ளோம். இந்த திட்டத்திற்கு தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவிக்கிறது, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்கிறது என அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு காவிரி நதிநீர் பிரச்சினையை அரசியலாக்கப் பார்க்கிறது. தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நமக்கு சாதகமாக தீர்ப்பளித்துள்ளது. அதனை எதிர்த்து தமிழ்நாடு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. சமீபத்தில் நமது அனைத்துக் கட்சி கூட்டத்தில் மேகதாது திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என ஒருமனதாக தீர்மானித்த பிறகும், தமிழ்நாடு அரசு அதன் சட்டப்பேரவையில் திட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்தத் தீர்மானத்திற்கு மதிப்பில்லை. அது சட்டத்திற்கும் உட்பட்டதில்லை. அது வெறும் அரசியல் தந்திரம். இதுபோல பல தீர்மானங்கள் உள்ளன. அவை எந்த மதிப்பையும் கொண்டிருக்கவில்லை” என்று முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
முன்னதாக, மேகதாதுவில் புதிய அணை கட்ட நிதி ஒதுக்கியுள்ள கர்நாடக அரசைக் கண்டித்து, தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது, பேரவையில் பேசிய தமிழக பாஜக உறுப்பினர் நயினார் நாகேந்திரன், ‘‘மேகதாது அணைக்கு எதிரான தமிழக அரசின் தீர்மானத்துக்கு ஆதரவு அளிக்கிறோம். பாஜக சார்பிலும் மத்திய அரசிடம் அனு மதி தரக்கூடாது என்று வலியுறுத்துவோம்’’ என்றார்.
காவிரி நடுவர் மன்றத்தின் தீர்வாணைக்கு எதிராகவும், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராகவும் காவிரியின் குறுக்கே மேகதாது அணையைக் கட்டுவதற்கான கர்நாடக அரசின் முயற்சிகளைக் கண்டித்து, தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் பட்ஜெட் கூட்டத்தொடரில் கொண்டுவந்த தனிநபர் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டிருப்பது, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் இவ்விஷயத்தில் ஒன்றுபட்டு நிற்பதை எடுத்துக்காட்டியுள்ளது கவனத்துக்குரியது.