வெலிங்டன்,
பெண்கள் உலக கோப்பை போட்டிகள் நியூசிலாந்தில் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று நடந்த 21வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.
தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியின் லாரா உல்வார்ட் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்து, 90 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய கேப்டன் சுனே லூவஸ் 52 ரன்கள் குவித்து வெளியேறினார். இறுதியில் அந்த அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் குவித்தது. இதனை அடுத்து 272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்தது.
தொடக்க வீராங்கனைகள் ரேச்சல் (17), அலைசா ஹீலி (1) ரன்களில் ஆட்டமிழந்தனர். எனினும் அணியின் கேப்டன் தளராமல் அதிரடியாக விளையாடினார். அவர் சதம் பூர்த்தி செய்துள்ளார். மற்ற வீராங்கனைகள் குறைந்த ரன்களில் வெளியேறினாலும், தொடர்ந்து போராடி ரன் குவிப்பில் ஈடுபட்டார்.
நிர்ணயிக்கப்பட்ட வெற்றி இலக்கை 45.2 ஓவரில் ஆஸ்திரேலியா அடைந்தது. கேப்டன் லேனிங் 135 ரன்கள் (130 பந்துகள் 15 பவுண்டரிகள், 1 சிக்சர்) எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 272 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றுள்ளது. தென்ஆப்பிரிக்கா சார்பில் ஷப்னிம் மற்றும் டிரையான் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.