"முஸ்லிம்கள் மீது வெறுப்பை விதைக்கவே ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்துக்கு வரிவிலக்கு” – ஃபரூக் அப்துல்லா கொந்தளிப்பு

புதுடெல்லி: ”முஸ்லிம்கள் மீது வெறுப்பை விதைக்கவே ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்திற்கு பல மாநிலங்களில் வரிவிலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது’ என்று ஜம்மு – காஷ்மீரின் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா குற்றம்சாட்டியுள்ளார்.

’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படம் பற்றிய தனது கருத்தை பதிவு செய்த அவர், ”விவேக் அக்னி கோத்ரி இயக்கி இருக்கும் ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்திற்கு வரிவிலக்கு அளிப்பதிருப்பதன் மூலமாக பாஜக தலைமையிலான அரசு மக்களின் மனங்களில் பிரிவினையைத் தூண்டிவிடப் பார்க்கிறது. அவர்கள் மக்களிடம் வெறுப்பை உண்டாக்குவதன் மூலமாக அவர்களின் மனங்களில் ஊடுறுவப் பார்க்கிறார்கள்.

காவல்துறை, ராணுவத்தில் இருக்கும் அனைவரும், ஒவ்வொரு குடிமகனும் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும் என அவர்கள் பிரச்சாரம் செய்வதன் மூலமாக அதிகமான வெறுப்பை விதைக்க விரும்புகிறார்கள்.ஜெர்மனியில் யூதர்களுக்கு எதிராக ஹிட்லர் உருவாக்கியதைப் போல இங்கு முஸ்லிம்கள் மீது இன்னும் அதிகமான வெறுப்பை உருவாக்க முயல்கிறார்கள். ஜெர்மனியில் ஆறு மில்லியன் யூதர்கள் அதற்கான விலையைக் கொடுக்க வேண்டியிருந்தது. இந்தியாவில் எத்தனை பேர் இவர்களுக்கான விலையைக் கொடுக்க வேண்டுமோ என எனக்குத் தெரியவில்லை.

’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படம் ஒரு பிரச்சாரப் படம். அது ஒரு பிரச்சார மேடையையைப் போல செயல்படுகிறது. மாநிலத்தின் இந்து, முஸ்லிம் மக்கள் அனைவரின் ஆன்மாக்களையும் பாதிக்கும் ஒரு சோகத்தை உருவாக்கியுள்ளது. சோகத்தால் என் இதயத்தில் இன்னும் ரத்தம் கசிந்து கொண்டிருக்கிறது. இன அழிப்பில் ஆர்வம் காட்டிய அரசியல் கட்சிகளின் அங்கம் அன்று இருந்தன.

கடந்த 1990-ம் ஆண்டு காஷ்மீரில் பண்டிட்களுக்கு மட்டும் இல்லாமல் முஸ்லிம்களுக்கும், சீக்கியர்களுக்கும் என்ன நடந்தது என்பதை விசாரித்து உண்மையைக் கண்டறிய ஓர் ஆணையம் அமைக்கப்பட வேண்டும். எனது எம்எல்ஏக்கள், தொழிலாளர்கள், அமைச்சர்கள் எல்லோரும் தங்களின் உணவுகளை மரத்தின் உச்சியில் இருந்து எடுத்துக்கொள்ள வேண்டியிருந்தது, அதுதான் அன்றைய நிலைமை” என்று அவர் தெரிவித்தார்.

காஷ்மீரில் 1990-களில் இந்து பண்டிட்களை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டதையும், தீவிரவாதிகளின் எச்சரிக்கையைத் தொடர்ந்து பண்டிட்கள் அங்கிருந்து வெளியேறிய சம்பவங்களையும் அடிப்படையாக கொண்டு ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ என்ற படம் சமீபத்தில் வெளியாகியது. இந்தப் படத்திற்கு வரிவிலக்கு அளிக்கவேண்டும் என்று மாகாரஷ்டிரா மாநிலம் மற்றும் ராஜஸ்தான் மாநில பாஜக எம்எல்ஏகள், அம்மாநில அரசுகளிடம் கோரிக்கை வைத்திருந்திருந்தனர்.

இதனிடையே, ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்துக்கு பாஜக ஆளும் ஹரியாணா, குஜராத், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வரிவிலக்கு அளிக்கப்பட்டது. அசாம் மாநிலத்தில் அரசு ஊழியர்கள் இப்படத்தைப் பார்க்க அரைநாள் விடுமுறை அளிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.