பெங்களூரு-”கே.எஸ்.ஆர்.டி.சி., டிப்போ அதிகாரிகள் மற்றும் தனியார் பஸ் உரிமையாளர்கள் கூட்டு சேர்ந்துள்ளதால், பயணியருக்கு தரமான போக்குவரத்து சேவை கிடைக்கவில்லை. போக்குவரத்து கழகத்தில் உள்ள குளறுபடிகளை சரி செய்யுங்கள்,” என காங்., உறுப்பினர் ராஜேந்திர ராஜண்ணா தெரிவித்தார்.சட்டமேலவை பூஜ்ய நேரத்தில், அவர் பேசியதாவது:பாவகடாவிலிருந்து, வை.என்.ஹொஸ்கோட் பாதையில், அரசு பஸ்களின் போக்குவரத்து குறைவாக உள்ளது. இதனால் பயணியர், தனியார் பஸ்களை நாட வேண்டிய கட்டாயம் உள்ளது.சில நாட்களுக்கு முன், பாவகடாவில் நடந்த பஸ் விபத்தில், மாணவர்கள் உட்பட, பலர் இறந்தனர். இவர்களின் குடும்பத்தினருக்கு, 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்குவதாக, அரசு அறிவித்துள்ளது. இந்த தொகையை, 25 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும். காயமடைந்தவர்களுக்கு, இலவச சிகிச்சையளிப்பதுடன், அவர்களுக்கும் நிவாரணத்தை அதிகரிக்க வேண்டும்.இந்த விபத்துக்கு, போக்குவரத்துத்துறை அதிகாரிகளை பொறுப்பாளியாக்க, அரசு முயற்சிப்பது சரியல்ல. கே.எஸ்.ஆர்.டி.சி., டிப்போ அதிகாரிகள் மற்றும் தனியார் பஸ் உரிமையாளர்கள் கூட்டு சேர்ந்துள்ளதால், பயணியருக்கு தரமான போக்குவரத்து சேவை கிடைக்கவில்லை. முதலில் போக்குவரத்து கழகத்தில் உள்ள குளறுபடிகளை சரி செய்யுங்கள்.மாணவர்கள் பாஸ்கள் வைத்துள்ளனர் என்பதால், இவர்களை அரசு பஸ்களில் ஏற்றிக்கொள்வதில்லை.இவ்வாறு அவர் கூறினார்.போக்குவரத்துத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலு: பஸ் பாஸ் வைத்துள்ள மாணவர்களை, பஸ்களில் ஏற்றிக்கொள்வது கட்டாயம். நானே நேரில் பரிசீலித்து, தவறுகளை சரி செய்கிறேன்.இவ்வாறு விவாதம் நடந்தது.
Advertisement