கோவை சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலை நடத்தக்கூடாது என மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி உறுப்பினராக தேர்வாகியுள்ள திமுகவை சேர்ந்த ஜெ.வனிதா என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், பேரூராட்சி தலைவர் வேட்பாளராக ஆ.ராகினி என்பவர் கட்சியால் அறிவிக்கப்பட்டதால், போட்டி வேட்பாளராக தலைவர் பதவிக்கு போட்டியிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
மார்ச் 4ம் தேதி நடந்த மறைமுக தேர்தலில் ராகினி 7 வாக்குகள் மட்டுமே பெற்றதால், 8 வாக்குகள் பெற்ற தன்னை பேரூராட்சி தலைவராக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்ததாகவும், அதிருப்தி அடைந்த ராகினியின் குடும்பத்தினர் தகராறில் ஈடுபட்டதை அடுத்து, தவறுகள் இருப்பதாக கூறி, தனக்கு வழங்கப்பட்ட சான்றிதழை, தேர்தல் அலுவலர் திரும்ப பெற்றதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
தவறுகளை சரிசெய்து மீண்டும் சான்றிதழை வழங்காமல், மீண்டும் தேர்தல் நடத்தபட்டு வாக்குகள் எண்ணப்படும் என தேர்தல் அலுவலர் அறிவித்தது சட்டவிரோதம் என அவர் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். சூளேஸ்வரன்ட்டி பேரூராட்சி தலைவராக வெற்றிபெற்றதாக தன்னை அறிவித்து, சான்றிதழை வழங்க தேர்தல் அலுவலருக்கு உத்தரவிட வேண்டுமெனவும் அவர் அந்த மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், மறைமுக தேர்தலை மார்ச் 26ஆம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் தேர்தலை நடத்த மாவட்ட உதவி ஆட்சியரை நியமித்துள்ளாதாகவும் தெரிவிக்கப்பட்டது.
தமிழக அரசு தரப்பில் தோல்வியடைந்த ராகினியின் தந்தை ஆறுச்சாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.
பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், தேர்தலை மீண்டும் நடத்துவதற்கான அவசியம் என்ன என கேள்வி எழுப்பியதுடன், பணியிடை நீக்கம் மட்டும் தீர்வாகாது என்றும், சிசிடிவி பதிவுகளை மாநில தேர்தல் ஆணையம் முழுமையாக ஆய்வுசெய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென உத்தரவிட்டுள்ளனர். அதிகவாக்குகள் பெற்று ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்பு, தோல்வி அடைந்தவர் தரப்பு செய்த குளறுபடியால், மீண்டும் மறைமுக தேர்தலை நடத்தினால் ஜனநாயகத்தின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை தோல்வியடைந்துவிடும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
ராகினியின் தந்தை மீது பதிவான வழக்கில் காவல்துறை முறையாக செயல்படாவிட்டால், அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்து வழக்கு விசாரணையை தள்ளிவைத்தனர். அதுவரை மறைமுக தேர்தலை நடத்தக்கூடாது எனவும் மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM