பீர்பூம் மாவட்டத்தில் 8 பேர் எரித்துக் கொலை – மேற்கு வங்காள அரசிடம் அறிக்கை கேட்கிறது உள்துறை அமைச்சகம்

புதுடெல்லி:
மேற்கு வங்காள மாநிலம் பீர்பூம் மாவட்டம் ராம்பூர்ஹத்தில் உள்ள பர்ஷல் கிராமத்தின் துணை தலைவராக இருந்தவர் பாது ஷேக். இவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். 
நேற்று இரவு பைக்கில் வந்த 4 பேர் ஷேக் மீது வெடிகுண்டு வீசி பயங்கர தாக்குதல் நடத்தினர். இதில் படுகாயம் அடைந்த பாது ஷேக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது உடல் சொந்த ஊரான போக்டுய் கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது. இவரது கொலை காரணமாக அந்த கிராமத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. ஒரு கும்பல் வன்முறையில் ஈடுபட்டது.
போக்டுய் கிராமத்தில் உள்ள வீடுகளை சூறையாடிய நிலையில், ஆத்திரமடைந்த கும்பல் பல வீடுகளுக்கு தீ வைத்தது. அதில் சுமார் 10 பேர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் 8 பேர் பலியாகினர் என உறுதி செய்யப்பட்டது. ஒரே வீட்டில் இருந்து 7 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இச்சம்பவத்துக்கு பா.ஜ.க. கண்டனத்தைத் தெரிவித்து மம்தா பானர்ஜி அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகிறது.
இதற்கிடையே, மேற்கு வங்காள கவர்னர் தேவையற்ற அறிக்கைகளை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும். பாரபட்சமற்ற விசாரணை நடத்த மாநில நிர்வாகத்தை அனுமதிக்க வேண்டும் என அம்மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில், பீர்பூம் மாவட்டத்தில் 8 பேர் எரித்துக் கொல்லப்பட்டது தொடர்பாக விரிவான அறிக்கை அளிக்க வேண்டும் என மேற்கு வங்காள அரசை மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.