“ரஷ்யாவுக்கு எதிராக ஜனநாயகங்கள் ஒன்றிணைய வேண்டும், இந்தியாவும்..!" – அமெரிக்கா கருத்து

உக்ரைனில் கிட்டத்தட்ட நான்கு வாரங்களாக ரஷ்யப் படையினர் நடத்திவரும் ஆக்கிரமிப்பு போராலும், ரஷ்யாமீது அமெரிக்கா உட்பட பல நாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடைகளாலும் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி பாதிப்படைந்துள்ளது. இதன் காரணமாக ரஷ்யாவும், தங்களின் கச்சா எண்ணெயை சலுகை விலையில் விற்பதற்குத் தயாராகி உள்ளது. அதனடிப்படையில், இந்தியாவுக்கும் சலுகை விலையில் கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்யத் தயாராக இருப்பதாக அண்மையில் ரஷ்யா கூறியிருந்தது. இந்தியாவும் அதைப் பரிசீலித்துவருவதாகத் தெரிவித்தது.

இந்தியாவின் இந்த நிலைப்பாடு தொடர்பாக, “ரஷ்யாமீது பொருளாதாரத் தடைகள் விதிக்கவும், ரஷ்ய அதிபர் புதினை எதிர்கொள்வதிலும் அமெரிக்காவின் நட்பு நாடான இந்தியா மட்டும் சற்று நடுங்குகிறது” என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று கூறியிருந்தார். இந்த நிலையில், தனியார் ஊடகத்திடம் அமெரிக்க வெளியுறவுத்துறை துணைச் செயலாளர் விக்டோரியா நுலாண்ட் ரஷ்யா விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்துப் பேசியிருக்கிறார்.

அதிபர் ஜோ பைடன்

இது தொடர்பாகப் பேசிய அவர், “ரஷ்யா மற்றும் சீனா போன்ற யதேச்சதிகாரங்கள் அமைதி மற்றும் பாதுகாப்புக்கு எவ்வளவு அச்சுறுத்தலாக இருக்கும் என்பதைக் காட்டும்போது, ​​ஜனநாயக நாடுகள் ஒன்றாக நிற்பது மிகவும் முக்கியம். இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான வரலாற்று உறவு மற்றும் பாதுகாப்பு உறவு பற்றி நாங்கள் அறிவோம். ஆனால் நாம் பார்க்கும் மிருகத்தனம், சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் மீறல் ஆகியவற்றின் அடிப்படையில் காலமும் மாறிவிட்டது.

ரஷ்யா – இந்தியா

இந்தியாவும் தனது நிலைப்பாட்டைத் தொடர்ந்து மேம்படுத்திவருவதால், அமெரிக்காவும் உதவ முடியும். அமெரிக்காவும் பிற நாடுகளும் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை முற்றிலுமாக நிறுத்த முடிவு செய்தபோது, அனைத்து ஜனநாயக கூட்டாளிகளும் உடனடியாக இதைச் செய்வார்கள் என்று வாஷிங்டன் எதிர்பார்க்கவில்லை. ஆனால் நாங்கள் செய்ய விரும்புவது, காலப்போக்கில் மாற்று ஆதாரங்களைக் கண்டறிய ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அதைத்தான் இந்தியாவுடன் செய்ய வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். ஏனெனில், ரஷ்யா தன்னை ஒரு நம்ப முடியாத மற்றும் சர்வதேசச் சட்டத்தை மீறுபவர் என்பதை நிரூபித்துள்ளது” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.