பெங்களூரு-”பெண்களுக்கு கழிவறைகள் இல்லை. பொது கழிப்பிடத்தை தான் பயன்படுத்துகின்றனர். தினமும் நான் இம்சை அனுபவிக்கிறேன். தங்கவயலில் மட்டும் ஏன் இந்த சூழ்நிலை,” என காங்கிரஸ் – எம்.எல்.ஏ., ரூபகலா, கர்நாடக சட்டசபையில் உருக்கத்துடன் பேசி அரசின் கவனத்தை ஈர்த்தார்.சட்டசபையில் கேள்வி நேரத்தில் நேற்று நடந்த விவாதம்:காங்., – ரூபகலா: தங்கவயலில் 30 ஆண்டுகளாக வியர்வை சிந்தி உழைத்த தொழிலாளர்களுக்கு வீடுகளும், பட்டாவும் வழங்கப்படவில்லை. கடந்த முறை பெய்த கன மழையால் பலரும் வீடுகள் இழந்தனர்.தங்கவயலில் மொத்தம் 30 ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்களுக்கு வீடுகள் இல்லை. ஆங்கிலேயர் வழங்கிய ஷெட்களில் தான் இன்னமும் வசிக்கின்றனர். நாட்டுக்கு சுதந்திரம் வந்து இவ்வளவு ஆண்டுகளாகியும் அரசு தரப்பில் ஒரு வீடு கூட இதுவரை வழங்கவில்லை.சரியான சாலைகள் வழங்க முடியவில்லை. என் தொகுதியில், பெண் களுக்கு கழிவறைகள் இல்லை. பொது கழிப்பிடத்தை தான் பயன்படுத்துகின்றனர். தினமும் நான் இம்சை அனுபவிக்கிறேன். தங்கவயலில் மட்டும் ஏன் இந்த சூழ்நிலை?கொரோனாவால் ரயில் போக்குவரத்து இன்றி தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். நுாற்றுக்கணக்கானோர் வேலை இழந்தனர். தயவுசெய்து வீடுகள் வழங்க வேண்டும்.வீட்டு வசதி துறை அமைச்சர் சோமண்ணா: தங்கவயலில் உள்ள 17 குடிசை வாழ் பகுதிகள், வீட்டு வசதி துறையின் கீழ் வருகின்றன. பட்டா வழங்கும் பணியை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.குடிசை வாழ் பகுதியாக அறிவித்துள்ள இடங்களுக்கு வசதிகள் செய்து கொடுக்கப்படும். 2016 – 17 ல், 843 வீடுகளில், 700 வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. இன்னும் 143 வீடுகள் நிறைவுபெறும் தருவாயில் உள்ளன.மேலும், 24.33 கோடி ரூபாயில், 400 வீடுகள் புதிதாக கட்டும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக என் சகோதரி ரூபகலா, அடிக்கடி என்னை சந்தித்து கொண்டே இருப்பார்.தங்கச்சுரங்கத்தில் இருந்த தொழிலாளர்களுக்கு பட்டா வழங்க வேண்டுமெனில், அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும். இல்லையென்றால் மாவட்ட கலெக்டர் வாயிலாக தகவல் வர வேண்டும்.இது தொடர்பாக மாவட்ட கலெக்டருக்கு கடிதம் எழுதி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.
Advertisement