“உக்ரைன் அகதிகளுக்காக..!" – நோபல் பதக்கத்தை விற்கும் ரஷ்யப் பத்திரிகையாளர்

உக்ரைனில் கடந்த மாதம் (பிப்ரவரி) 24-ம் தேதி முதல் ரஷ்யப் படையினருக்கும், உக்ரேனிய படையினருக்கும் இடையே போர் நடைபெற்றுவருகிறது. உக்ரைனின் முக்கிய நகரங்களான கீவ், கார்கிவ் போன்ற நகரங்களை ஆக்கிரமிக்கும் முனைப்புடன் ரஷ்யப் படையினர் தொடர் வெடிகுண்டுத் தாக்குதலில் ஈடுபட்டுவருகின்றனர். உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் போரில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட பல நாடுகள் மனிதாபிமான அடிப்படையில் பொருளாதார உதவிகள், ராணுவ உபகரணங்களை அளிப்பது போன்ற உதவிகளை நேரடியாகவே உக்ரைனுக்கு வழங்கிவருகின்றன. பொதுமக்கள் தங்களின் உயிரையும், உடைமைகளையும் பாதுகாத்துக்கொள்ள அண்டை நாடுகளுக்குப் படையெடுத்துவருகின்றனர்.

உக்ரைன் – ரஷ்யா போர்

ரஷ்யாவைச் சேர்ந்த டிமிட்ரி முரடோவ் என்பவர் நோவாயா காஸிடா (Novaya Gazeta) என்ற பத்திரிகையின் ஆசிரியராக பணிபுரிந்துவருகிறார். இவருக்குக் கடந்த 2021-ம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவர் முன்னதாக, தான் வாங்கிய நோபல் பரிசுத்தொகையை மாஸ்கோவில் முதுகெலும்பு பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் மருத்துவச் செலவுக்காகக் கொடுத்து உதவினார். தற்போது உக்ரைன் அகதிகளுக்கு உணவு வழங்கவும், காயமடைந்தவர்களுக்கு மருத்துவச் செலவுக்கு நிதி திரட்டவும் இவர் ஏற்பாடு செய்துவருவதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக டிமிட்ரி முரடோவ் அமைதிக்காக தான் வாங்கிய நோபல் பதக்கத்தை ஏலம்விட இருப்பதாகவும் கூறப்படுகிறது. உக்ரைனுக்கு உதவ முன்வந்திருக்கும் இந்த ரஷ்ய பத்திரிகையாளரை அனைவரும் பாராட்டிவருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.