சத்குரு ஜக்கி வாசுதேவ் உலக அளவில் மண் வளத்தைப் பாதுகாக்க சட்டங்கள் இயற்றவும் அது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் 3 கண்டங்களில் உள்ள 27 நாடுகள் வழியாக 100 நாள்களில் 30,000 கி.மீ தொலைவு பி.எம்.டபில்யூ பைக்கில் உலக சுற்றுப் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.
சத்குரு ஜக்கி வாசுதேவ் BMW K1600 GT பைக்கில் இங்கிலாந்தில் இருந்து இந்தியாவிற்கு 30,000 கிமீ பயணத்தை மார்ச் 21ம் தேதி தொடங்கினார். சத்குருவின் மோட்டார் பைக் பயணம் ஜூன் 21-ம் தேதி கோடைகால சங்கிராந்தியுடன் முடிவடைகிறது.
ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான சத்குருவின் பி.எம்.டபிள்யூ பைக்கில் 30,000 கிமீ தொலைவு சுற்றுப்பயணம் லண்டன் பார்லிமென்ட் சதுக்கத்தில் தொடங்கியது. ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் வழியாக இந்தியாவுக்குச் செல்லும் வழியில் மண்ணைக் காப்பாற்றுங்கள் என்ற விழிப்புணர்வு பிரச்சாரம் செய்கிறார்.
64 வயதான யோகா குரு ஜக்கி வாசுதேவ், 100 நாள் சுற்றுப்பயணத்திற்காக தனது பைக் சூட்டை அணிந்துள்ளார். அவர் இந்த வாரம், BMW K1600 GT பைக்கில் ஆம்ஸ்டர்டாம், பெர்லின் மற்றும் ப்ராகுவே நகரங்களுக்கு செல்கிறார்.
தனது சுற்றுப் பயணத்தின் வழியில் முக்கிய நகரங்களில் திட்டமிடப்பட்ட நிகழ்வுகளில் பங்கேற்ற பிறகு, இந்தியாவின் 75வது சுதந்திரத்தை முன்னிட்டு 75 நாட்களில் புதுடெல்லிக்கு தாயகம் திரும்புகிறார்.
“நாம் இப்போது செயல்படுவதுதான் மிகவும் முக்கியம். நான் 24 ஆண்டுகளுக்கும் மேலாக இதைப் பற்றி பேசி வருகிறேன். ஆனால், ஒவ்வொரு நாட்டிலும் நேர்மறையான கொள்கை இருந்தால் மட்டுமே இதற்கு தீர்வு கிடைக்கும்” என்று சத்குரு ஜக்கி வாசுதேவ் தனது பைக் பயணம் பற்றி லண்டனில் உள்ள தூதரகத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.
“ஐரோப்பாவின் பல பகுதிகளில் இன்னும் பனிப்பொழிவு உள்ளது, நாங்கள் இரு சக்கர வாகனத்தில் செல்வோம். இந்த வயதில், இது உண்மையில் மகிழ்ச்சியான சவாரி அல்ல. நான் ஏன் இதைச் செய்கிறேன் என்றால், 300,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடந்த 20 ஆண்டுகளாக, இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் இது நடக்கிறது… மண்வளம் குறைவது முக்கிய கவலைகளில் ஒன்று” என்று ஜக்கி வாசுதேவ் கூறினார்.
இந்த உலக சுற்றுப் பயணம், பயிரிடக்கூடிய மண்ணில் கரிம உள்ளடக்கத்தை அதிகரிப்பதற்கான தேசிய கொள்கைகளை நிறுவுவதற்கு நாடுகளை ஒப்புக்கொள்ளச் செய்வதில் கவனம் செலுத்தப்படுகிறது.
“நாம் கிரிக்கெட் மைதானத்தில் இருந்தாலும் சரி, வாழ்க்கை மைதானத்தில் இருந்தாலும் சரி, நாம் நன்றாக விளையாட வேண்டுமானால், மண் நன்றாக இருக்க வேண்டும். ஒன்று கூடி விஷயங்களை மாற்றுவதற்கான நேரம். அதைச் செய்வோம்” என்று அவர் லண்டனில் கூறினார். அவரது இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக மிடில்செக்ஸ் கிரிக்கெட் கிளப் உடனான உரையாடலுக்காக லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானம் வந்தார்.
கடந்த வாரம் பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் பேசிய ஜக்கி வாசுதேவ், “நம்மிடம் எவ்வளவு செல்வம், கல்வி, பணம் இருந்தாலும், மண்ணையும் நீரையும் மீட்டெடுக்காத வரை நம் குழந்தைகள் நலமாக வாழ முடியாது. பிரக்ஞை பூர்வமான கிரகம்தான் முன்னோக்கி செல்வதர்கான ஒரே வழி” என்று கூறினார்.
சத்குரு ஜக்கி வாசுதேவ்வின் தனிமையான பைக் உலக சுற்றுப் பயணம் ஜூன் 21-ம் தேதி கோடைகால சங்கிராந்தியுடன் முடிவடைகிறது. இந்த சுற்றுப் பயணம், காவிரி ஆற்றுப் படுகையில் உள்ள தனியார் விவசாய நிலங்களில் 2.42 பில்லியன் மரங்களை நடவு செய்து, கடுமையாக வறண்டு போன நதியை மீட்டெடுக்கவும், மண்ணுக்கு புத்துயிர் அளிக்கவும் உதவுகிறது.
ஐக்கிய நாடுகளின் பாலைவனமாக்கலை எதிர்த்துப் போராடுவதற்கான மாநாட்டின் (UNCCD) படி, 2050 ஆம் ஆண்டளவில் பூமியின் மண்ணில் 90 சதவீதத்திற்கும் அதிகமான நிலம் சிதைந்துவிடும். இது உணவு மற்றும் நீர் பற்றாக்குறை, வறட்சி மற்றும் பஞ்சம், பாதகமான காலநிலை மாற்றங்கள், மக்கள் கூட்டம் கூட்டமாக இடம்பெயர்தல், மற்றும் முன்னெப்போதும் இல்லாத வகையில் உலகளாவிய பேரழிவு நெருக்கடிகளுக்கு வழிவகுக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
மண்ணைப் பாதுகாக்கும் பிரச்சாரமானது குறைந்தபட்சம் 3.5 பில்லியன் மக்களை அல்லது உலக வாக்காளர்களில் 60 சதவீத மக்களை மண்ணுக்கு புத்துயிர் அளிப்பதற்கும் அதன் அழிவை தடுப்பதற்கும் நீண்டகால அரசாங்கக் கொள்கைகளை ஆதரிக்க ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“