வூஷாவ்: சீன விமான விபத்து நடைபெற்று 36 மணி நேரம் ஆகியும் பயணிகள் உடல்கள் எதுவும் கிடைக்கவில்லை என மீட்புப்படையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த திங்களன்று சீன மாகாணமான வூஷோவ் மாகாணத்தில் 132 பயணிகளுடன் சென்ற சீன விமானம் விபத்துக்குள்ளானது. இதனையடுத்து கடந்த 36 மணி நேரமாக பேரிடர் மீட்புப் பணியினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
விமானம் விழுந்ததாக கூறப்படும் பகுதியில் அடர்ந்த காடு உள்ளது. இந்த காட்டில் விமானத்தின் உதிரிபாகங்கள் ஆங்காங்கே கிடைப்பது உறுதியாகி உள்ளது. ஆனால் பயணிகளின் பிரேதம் எதுவும் தென்படவில்லை. விமானத்தின் கருப்பு பெட்டி தற்போது தேடப்பட்டு வரும் நிலையில் விமானம் எதனால் விபத்துக்குள்ளானது என்று இன்னும் திட்டவட்டமான முடிவுக்கு வரமுடியவில்லை என்று விமான அதிகாரி சூ டாவ் தெரிவித்துள்ளார்.
20 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து அதி வேகத்தில் கீழே விழுந்து விமானம் நொறுங்கி இருக்கலாம் என தற்போது கணிக்கப்படுகிறது. விமானம் விபத்துக்குள்ளான பகுதியில் இடி இடித்தது போன்ற சத்தம் கேட்டதாக அப்பகுதியில் வாழும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான முழு விசாரணையை முடுக்கி விட சீன அதிபர் ஜி ஜிங்பிங் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 1994ஆம் ஆண்டு 160 பேருடன் பயணித்த சீன விமானம் விபத்துக்குள்ளானதை அடுத்து 18 ஆண்டுகள் கழித்து தற்போதுதான் சீனாவில் விமான விபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்து ஏற்படுவதற்கு முன்னர் உலகின் சிறந்த பாதுகாப்பான விமான பயணத்தில் சீனா தனது பெயரை பல ஆண்டுகாலமாக தக்க வைத்துக் கொண்டிருந்தது.
Advertisement