திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலின் கமலாலய குளம் மிகவும் புகழ்பெற்றது. `கோயில் ஐந்து வேலி… குளம் ஐந்து வேலி’ எனப் போற்றப்படும் இந்தக் குளம், கோயிலுக்கு நிகரான பரப்பில் பிரமாண்டமாகக் காட்சி அளிக்கக்கூடியது. இந்தக் குளத்தில் எப்போதும் தண்ணீர் நிறைந்திருக்கும். இந்த நிலையில்தான், இந்தக் குளத்தில் மூழ்கி சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் அருகேயுள்ள புலிவலம் பெருமாள் கோயில் தெருவில் வசித்துவருபவர் அன்பழகன். இவருடைய மகன் சக்திவேல். பதினான்கு வயதான சக்திவேல் 7-ம் வகுப்பு வரை படித்து, பின்னர் படிப்பை நிறுத்திவிட்டார். இந்த நிலையில், சக்திவேல் தன் நண்பர்களான பரணீதரன், அஸ்வின் ஆகியோருடன் சேர்ந்து திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயிலின் கமலாலய குளத்தில் குளிக்கச் சென்றிருக்கிறார்.
குளத்தில் மூவரும் நீச்சலடித்து விளையாடிக்கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக சக்திவேல், பரணீதரன், அஸ்வின் மூவருமே தண்ணீரில் மூழ்கித் தத்தளித்து உயிருக்குப் போராடியிருக்கிறார்கள். அப்போது அங்கிருந்த பொதுமக்கள், இது குறித்து தீயணைப்பு மீட்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார்கள். உடனடியாக கமலாலய குளத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு மீட்புப் படை வீரர்கள், தண்ணீரில் மூழ்கிய சக்திவேல், பரணீதரன், அஸ்வின் ஆகிய மூவரையும் மீட்டனர். பரணீதரன், அஸ்வின் இருவரும் உயிரோடு மீட்கப்பட, உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக்கொண்டிருந்த சிறுவன் சக்திவேலுக்கு, முதலுதவி சிகிச்சை அளித்தனர். ஆனால் எந்தவித பலனும் இல்லாததால் தீயணைப்புத்துறை வாகனம் மூலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு சென்றனர். அங்கு சக்திவேலைப் பரிசோதித்த மருத்துவர்கள், சக்திவேல் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
திருவாரூர் நகர காவல்துறையினர் இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.