கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் மக்கள் பயன் பெற தண்ணீர் மற்றும் நீர் மோர் பந்தல்களை அமைத்திட வேண்டும் என்று, தொண்டர்களுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “கோடைக்காலம் தொடங்கி வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பல நகரங்களில் 100 டிகிரியைத் தாண்டி வெப்பம் கொளுத்துகிறது. இன்னும் போகப் போக வெயிலின் தாக்கம் அதிகரிக்கப்பதற்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நேரத்தில் நம் நெஞ்சங்களில் நிறைந்திருக்கிற புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் தமிழகம் முழுவதும் தண்ணீர் பந்தல்களையும் நீர் மோர்ப் பந்தல்களையும் திறந்திட வேண்டுகிறேன். இதற்கான ஏற்பாடுகளை அந்தந்தப் பகுதியில் இருக்கிற கழக நிர்வாகிகளும், உடன்பிறப்புகளும் மேற்கொள்ளுமாறு வேண்டுமென அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கண்மணிகளின் இந்தப் பணி, பாதசாரிகளுக்கும், இரு சக்கர வாகனங்களில் செல்வோருக்கும் உதவியாக அமைந்திட வேண்டும். அதற்கு ஏற்றவாறு இடங்களைத் தேர்வு செய்து தண்ணீர் மற்றும் நீர் மோர்ப் பந்தல்களை நிறுவிட வேண்டுகிறேன்”
இவ்வாறு அந்த அறிக்கையில் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.