சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வால், சாமான்ய குடும்பங்கள் மீண்டும் விறகடுப்புக்கு மாறத் தொடங்கியிருக்கின்றன. அப்படி ஒரு குடும்பம் சிலிண்டர் விலை உயர்வு குறித்து என்ன சொல்கிறது எனப் பார்க்கலாம்.
திருச்சி அரியமங்கலம் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த சுசீலாவும் அவரது கணவரும் கூலி வேலை பார்த்துத்தான் குடும்பத்தை நடத்துகிறார்கள். இவர்களின் தினசரி வருவாயே 200 முதல் 500 ரூபாயாக உள்ள நிலையில், மாதாந்திர செலவுகளோடு, சிலிண்டர் விலையும் ஏறினால் என்ன செய்வது என்று திகைத்திருக்கிறது இக்குடும்பம். சிலிண்டருடன் அவ்வப்போது விறகடுப்பை பயன்படுத்திய சுசீலா, இப்போது முழுவதுமாகவே விறகடுப்புக்கு மாறிவிட்டார்.
திருச்சியில் ஒரு கிலோ விறகு ஐந்து ரூபாய்க்கு விற்கப்படுகிறது. விறகை மொத்தமாக 25 கிலோவாகத்தான் விற்கிறார்கள் என்பதால், 25 கிலோ விறகை வாங்கிவைத்திருக்கிறது சுசீலா குடும்பம். சிலிண்டர் விலை உயர்வோடு, மற்ற விலைவாசி உயர்வையும் எப்படி சமாளிப்பது எனப் புரியாமல் தவிக்கும் சுசீலா குடும்பம் ஒட்டுமொத்த சாமான்ய இந்திய குடும்பத்தின் ஒரு உதாரணமே. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM