தமிழ்நாட்டின் பாரம்பரிய கலைகளை மக்களின் மத்தியில் போற்றப்படும் வண்ணம் ‘நம்ம ஊர் திருவிழா’ சென்னை தீவுத்திடல் திங்கள்கிழமை தொடங்கியது. ஆண்டுதோறும் ஏறக்குறைய 400க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்கும் இவ்விழாவை தமிழ்நாடு கலை பண்பாட்டுத் துறை ஏற்பாடு செய்துள்ளது.
இவ்விழாவை, தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் தொடங்கிவைத்தனர்.
மேலும், சென்னை மேயர் பிரியா, தமிழ்நாடு டி.ஜி.பி. சயேந்திர பாபு, மற்றும் பலர் கலந்துகொண்டனர்
சென்னை அரசு இசைக் கல்லூரி மாணவர்களின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இந்நிகழ்ச்சி, அதைத் தொடர்ந்து ஆனந்தன் குழுவினரின் மங்கள இசை, திருவண்ணாமலை குமார் குழுவினரின் கட்டைக் கூத்து, மதுரை தட்சிணாமூர்த்தி குழுவினரின் கொம்பு இசை, திருவண்ணாமலை முனுசாமி குழுவினரின் பெரிய மேளம் ஆகியவை நடைபெற்றது.
தென்காசி கண்ணன், ராமமூர்த்தி குழுவினரின் மகுடம் குழுவினருடன் இணைந்து இசை கச்சேரி, கோவை சாமிநாதன் துடும்பு மேளம், கிருஷ்ணகிரி மஞ்சுநாதன் பம்பை மேளம், ராமநாதபுரம் முருகன் நையாண்டி மேளம், கண்கவர் நடன வடிவங்கள், கலை வடிவங்கள் மற்றும் சாகச நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை கவரும் வண்ணம் நடைபெற்றது.