வைகோவின் மகன் துரை வைகோவுக்கு எதிராக வாரிசு அரசியால் குற்றச்சாட்டை முன்வைத்தும், மதிமுகவை திமுக வில் இணைக்க வேண்டும் என்ற கருத்தை வெளிப்படுத்தி சிவகங்கை மாவட்டத்தில் 3 மாவட்ட செயலாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில், இதற்கு துரை வைகோவின் பதில் என்ன?
இது தொடர்பாக துரை வைகோ புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில், ” நான் அரசியலுக்கு வந்ததை வாரிசு அரசியல் என்று சொல்ல முடியாது. கட்டாயத்தின் அடிப்படையில் தலைவர் வைகோவுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கட்சிக்கு வந்தேன். தற்போது என்னை எதிர்க்கும் சிவகங்கை மாவட்ட செயலாளர் நான் கட்சிக்கு வர வேண்டும் என பலமுறை வலியுறுத்தி இருக்கிறார்
கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காததால் தற்போது தலைமைக்கு எதிராக பேசுகின்றனர். சில காலம் அவர் செயல்படாமல் இருந்து இருக்கிறார். கடந்த உள்ளாட்சி தேர்தலில் கூட வேலை செய்யவில்லை. கட்சிக்கு எதிராக பேசும் நிர்வாகிகள் மீது கட்சி சட்ட திட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுப்பார்கள். நாளை நடக்கும் பொதுக்குழு கட்சி வளர்ச்சிக்கு பயனுள்ள வகையில் இருக்கும்” என தெரிவித்தார்
கடந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்த காரணத்தால் 28 வது மதிமுக பொதுக்குழு கூட்டம் நாளை சென்னையில் நடக்கிறது. 10 ஆண்டுகளுக்கு பிறகு கட்சியில் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் வெற்றிக்கு பிறகு நடக்கும் பொதுக்குழு என்பதால் முக்கியமாக பார்க்கப்படுகிறது. அதே சூழலில் வைகோ மகன் துரை வைகோவுக்கு கட்சியில் பொறுப்பு வழங்கப்பட்டதற்கு எதிராக சிவகங்கை, விருதுநகர், திருவள்ளூர் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நடத்தி இருக்கின்றனர். இந்த பிரச்னை பொதுக்குழு கூட்டத்தில் எதிரொலிக்க வாய்ப்பு இருப்பதாக பத்திரிக்கையாளர்கள் கூறுகின்றார்
மதிமுக அரசியல் பயணத்தில் இதுவரை பார்க்காத பிரச்னையில்லை. ஆனால் தற்போது வாரிசு அரசியலை வைகோ ஊக்குவிக்கிறார் என்ற குற்றச்சாட்டும், திமுகவுடன் கட்சியை இணைக்க வேண்டும் குரல்களும் மேலோங்கி இருப்பது கட்சிக்கு நெருக்கடி என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். ஆனால் இது கட்சிக்கு எந்த நெருடலும் இல்லை என்றும், திமுகவில் மதிமுகவை இணைக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை என்கின்றனர். சட்டமன்ற தேர்தலில் வாய்ப்பு கிடைக்காததால் தான் மதிமுக வுக்கு எதிராக அரசியல் செய்வதாக கட்சியினர் கூறுகின்றனர்
வாரிசு அரசியலை எதிர்த்து கட்சியை தொடங்கிய வைகோவின் மதிமுக , தற்போது இதே சிக்கலை சந்தித்து இருக்கும் நிலையில் கட்சியின் தனித் தன்மையை காக்க வேண்டிய பொறுப்பு அவசியமானது என அரசியல் விமர்சகர்கள் கருத்தை முன் வைக்கின்றனர் Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM