பேருந்து படிக்கட்டுகளில் ஆபத்தான முறையில் பயணம் செய்த மாணவர்களை எச்சரித்து “இனிமேல் பாதுகாப்பான பயணம் மேற்கோள்வோம்” என உறுதிமொழி எடுக்க வைத்துள்ளனர் அன்னூர் காவல்துறையினர்.
சமீப காலமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் சிலர் ஆபத்தான முறையில் பேருந்து மற்றும் ரயில்களில் படிக்கட்டுகளில் பயணம் செய்து அடிக்கடி விபத்து நிகழ்கிறது. இதை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் தற்போது காவல்துறை மற்றும் போக்குவரத்துத் துறை தீவிரம் காட்டி வருகிறது. இன்று ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திலிருந்து கோவை நோக்கி வந்த தனியார் பேருந்து அன்னூர் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது, அந்த பேருந்தின் படிக்கட்டுக்களில் பள்ளி மாணவர்கள் உட்பட இளைஞர்கள் பயணித்து வந்துள்ளனர்.
இந்த ஆபத்தான பயணத்தை பார்த்த அன்னூர் காவல் ஆய்வாளர் நித்யா தலைமையிலான காவல்துறையினர், பேருந்தை நிறுத்தினர். படிக்கட்டுகளில் பயணம் மேற்கொள்ள அனுமதித்த பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் ஆகிய இருவருக்கு தலா 600 ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும் படியில் தொங்கியபடி பயணித்த மாணவர்கள் உட்பட இளைஞர்களை கீழே இறக்கி அறிவுரை கூறினர்.
“இனி பேருந்தில் படியில் தொங்கியபடி பயணிக்க மாட்டோம்” என மாணவர்களை உறுதிமொழி ஏற்கச் செய்தனர். மீறி பயணித்தால் இனி சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்துவோம் என எச்சரித்து அனுப்பி வைத்தனர் அன்னூர் காவல் துறையினர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM