தஞ்சாவூர் | ரூ.5 கோடி மதிப்பிலான இடம் மீட்பு; 2,400 சதுரஅடி கட்டிடத்தை இடித்து அகற்றிய மாநகராட்சி

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் ரூ.5 கோடி மதிப்பிலான 2,400 சதுரஅடி பரப்பளவில் கட்டிப்பட்டிருந்த கட்டிடம் இடித்து அகற்றப்பட்டு, அந்த இடத்தை மாநகராட்சி அதிகாரிகள் மீட்டனர்.

தஞ்சாவூர் தென்கீழ் அலங்கம் பகுதியில் அகழிகரையில் பல ஆண்டுகளுக்கு முன்பு முத்து வைத்திய சாலை என்ற தனியார் மருத்துவமனை செயல்பட்டு வந்தது. பின்னர் மருத்துவமனை இருந்த இடத்தை பாலகிருஷ்ணன் என்பவர் தனது மளிகை கடைக்கான பொருட்களை வைக்கும் குடோனாக பயன்படுத்தி வந்தார். இதற்கிடையில் தஞ்சாவூர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தென்கீழ் அலங்கம் சாலையை விரிவுபடுத்திட இடையூறாக இருந்த இந்தக் கட்டிடத்தை இடிக்க மாநகராட்சி முடிவு செய்தது. இதை எதிர்த்து பாலகிருஷ்ணனின் மகன்கள் தஞ்சாவூர் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு தஞ்சாவூர் மாநகராட்சிக்கு சாதகமாக அமைந்தது.

இதையடுத்து, இன்று சாலை விரிவாக்கம் செய்ய இடையூறாக இருந்த 2,400 சதுரஅடி பரப்பளவிலான ரூ.5 கோடி மதிப்பிலான இந்தக் கட்டிடத்தை பொக்லீன் இயந்திரம் இடித்து அகற்றும் பணி மாநகராட்சி ஆணையர் க.சரவணக்குமார் மேற்பார்வையில் நகரமைப்பு அலுவலர் ராஜசேகர் முன்னிலையில் நடந்தது.

அதேபோல் தென்கீழ் அலங்கம் பகுதியில் ஏற்கெனவே உள்ள கழிவுநீர் சாக்கடையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்கள் அனைத்தையும் இடித்து அகற்றும் விதமாக, அந்த ஆக்கிரமிப்பில் உள்ள கட்டிடங்களில் தற்போது வசிப்பவர்களுக்கு ஆக்கிரமிப்பை அகற்றிக் கொள்ள உரிய கால அவகாசம் வழங்கப்பட்டது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் க.சரவணக்குமார் கூறும்போது, “அகழியின் கரையில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடம் சாலை விரிவாக்கத்துக்கு இடையூறாக இருந்தது. இதையடுத்து கட்டிடத்தை இடித்து அகற்ற முடிவு செய்யப்பட்டதும், தற்போது கட்டிடத்தை பயன்படுத்துவர்கள் நீதிமன்றத்தை நாடினர். நீதிமன்றம் மாநகராட்சிக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, கட்டிடத்தை வைத்திருந்தவர்கள் தாங்களாகவே நேற்று இடத்தை இடித்து தருவதாக கூறினர். தொடர்ந்து மாநகராட்சி பணியாளர்கள் முன்னிலையில் கட்டிடம் இடித்து அகற்றப்பட்டது” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.