ஓசூர்: உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு ஓசூர் வனச்சரக காப்புக்காடுகளில் வாழும் வனவிலங்குகளின் தாகம் தணிக்கும் வகையில் காப்புக்காடு தொட்டிகளில் தண்ணீர் நிரம்பும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
ஓசூர் வனச்சரகத்தில் சானமாவு காப்புக்காடு, செட்டிப்பள்ளி காப்புக்காடு, கும்பளம்-1 காப்புக்காடு, கும்பளம்-2 காப்புக்காடு, குலு காப்புக்காடு, சானமாவு விரிவாக்கம் காப்புக்காடு உட்பட 12 காப்புக்காடுகள் அமைந்துள்ளன. இந்த காப்புக்காடுகளில் வாழும் யானை, சிறுத்தை, காட்டெருமை, புள்ளிமான், முயல் உள்ளிட்ட வனவிலங்குகளின் குடிநீர் தேவைக்காக வனத்தில் அமைந்துள்ள இயற்கையான ஏரி, குளம் உள்ளிட்ட நீர் நிலைகளுடன், வனத்துறை சார்பில் செயற்கையான தண்ணீர் தொட்டிகளும் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது கோடை காலத்தின் ஆரம்ப கட்டத்திலேயே வெயில் அதிகரித்து வரும் நிலையில், இன்று உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு வனவிலங்குகளின் தண்ணீர் தேவைக்காக தொட்டிகளில் குடிநீர் நிரப்பும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதில், முதல்கட்டமாக வனச்சரகர் ரவி தலைமையில் சானமாவு காப்புக்காட்டில் உள்ள சுமார் 1.5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 பெரிய தொட்டிகளில் டிராக்டர் மூலமாக தண்ணீர் நிரம்பும் பணி நடைபெற்றது. இந்த பணிகளை மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயினி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது நேரடியாக தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணியில் ஈடுபட்டார். அதேபோல செட்டிப்பள்ளி காப்புக்காடு, எரண்டப்பள்ளி காப்புக்காடு உட்பட வனத்தில் உள்ள 8 தொட்டிகளில் வனவிலங்குகளின் தாகம் தணிக்க தண்ணீர் நிரப்பும் பணி தொடங்கி உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.